மலையாள நடிகரான ஃபகத் ஃபாசில் படப்பிடிப்பின்போது, தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலையாளத்தின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் ஃபகத் ஃபாசில். கதைத்தேர்வில் மிரளவைக்கும் ஃபகத், நடிப்பிலும் சிக்ஸர் விளாசுவார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் வில்லனாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். சமீபத்தில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திலும் நடித்திருந்தார்.
இந்த லாக் டவுன் நேரத்தில் ஃபகத் நடித்த டிரான்ஸ் மற்றும் C U SOON படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தற்போது, சஜிமோன் பிரபாகரன் இயக்கத்தில் ’மலையன்குஞ்சு’ படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். தனுஷின் கர்ணன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு மகேஷ் நாராயணன் கதை எழுதியுள்ளார். சொல்லப் போனால், டேக் ஆஃப், C U SOON மற்றும் மாலிக் படங்களைத் தொடர்ந்து ஃபகத் & மகேஷ் நாராயணன் கூட்டணியில் இது நான்காவது படம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வருகிறது. சண்டைக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்து வந்திருக்கிறது. உயரமான இடத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சிகள் படமாக்கியிருக்கிறார்கள். அப்போது தவறி விழுந்ததில் ஃபகத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மூக்கில் அடிபட்டு ரத்தம் வந்ததாகவும் சொல்கிறார்கள். உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ஃபகத். இன்னும் சில தினங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்க இருக்கிறாராம். அதனால், படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டார்.
**- ஆதினி **
�,