உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றதை ’83’ என்ற தலைப்பில் திரைப்படமாக தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் கபில் தேவ் பாத்திரத்தில் ரன்வீர் சிங்கும், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாத்திரத்தில் ஜீவா மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். தீபிகா படுகோனே, இப்படத்தில் கபில்தேவின் மனைவியாக நடித்துள்ளார். கபீர்கான் இயக்கி உள்ளார்.
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 24 அன்று வெளியாகிறது. இத்திரைப்படத்தினை தீபிகா படுகோனே, கபீர் கான், விஷ்ணு இந்தூரி, சஜித் நடியாவாலா, பாந்தோம் பிலிம்ஸ், 83 பிலிம்ஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்தில் தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்சும் இணைந்துள்ளது. தமிழ்நாட்டில் படத்தை வெளியிடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது ராஜ்கமல் பிலிம்ஸ். இதை தொடர்ந்து படத்திற்கான விளம்பர பணிகளில் தமிழ்நாட்டில் கமல்ஹாசன் இணைவார் என்று தெரிகிறது.
இதுதொடர்பாக தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் , “இந்தியா போன்ற எண்ணற்ற மதங்கள் மற்றும் சமூகங்களை உள்ளடக்கிய பல தரப்பட்ட மக்கள் வாழும் தேசத்தில், கிரிக்கெட் மற்றும் திரைப்படங்கள் மட்டுமே அத்தகைய தடைகளை தாண்டி, மக்களை உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைக்கும் களமாக இருந்து வருகிறது.
இந்திய மக்கள் கொண்டாடும் கிரிக்கெட் விளையாட்டில் ஒரு அற்புத தருணம் என்றால் 1983 இல் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்று மொத்த உலகத்தையும் ஆச்சரியப்படுத்திய அழகான தருணம் தான். அதைத்தான் இந்த படம் மீண்டும் நிகழ்த்தி காட்டுகிறது.
படத்துடன் கமல்ஹாசனின் தொடர்பு வெறும் வர்த்தக காரணிகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை, அவருக்கும் இந்த படைப்பிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. கமல்ஹாசன், ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் சின்னமாக இருந்து வருகிறார். 83 திரைப்படத்தை பார்க்க, தமிழ்நாட்டில் ரசிகர்களை திரையரங்கிற்கு வரவைக்கும் ஒரு அருமையான காரணியாக கமல்ஹாசன் இருப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-இராமானுஜம்**
�,