மகாராணி, ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்குகள் மூடப்பட்டது ஏன்?

Published On:

| By Balaji

தமிழகத்தில் தொடக்க காலத்தில் கௌரவத்திற்காக, குடும்ப பெருமைக்காக, ஊர் பெயர் சொல்வதற்காக தொடங்கப்பட்ட ஒற்றை திரையரங்குகள் தான் தமிழ் சினிமாவை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தன.

எம்.ஜி.ஆர், சிவாஜி , மு.கருணாநிதி போன்ற திரை ஆளுமைகள் உருவாக புகழ்பெற இந்த திரையரங்குகளே காரணமானது. 3500 திரையரங்குகளில் வருடத்திற்கு 200க்கும் அதிகமான நேரடி தமிழ் படங்கள், மொழிமாற்று படங்கள் என வாரம் தோறும் வெளியாகி, சினிமா பொருளாதாரம் வளர காரணமாக இருந்த சூழல் 1990களில் மாற்றம் காணத் தொடங்கியது. நான்காம் தலைமுறை நடிகர்கள் கடந்த கால சினிமா வரலாறு தெரியாமல் கோடிகளில் சம்பளம், நடிப்பது மட்டுமே தங்கள் வேலை என சுருங்கிக் கொண்டனர்.

தொடர் நஷ்டத்தை சந்திக்க முடியாமல் 2500 திரையரங்குகள் காணாமல் போனது. லாப நோக்கத்தை மட்டுமே முன் உரிமையாக கொண்ட நவீன வாரிசுகள் பாரம்பரியமும், பெருமை கொண்ட ஒற்றை திரையரங்குகளை காசு காய்க்கும் மரமாக மாற்ற விரும்பியதன் விளைவால் அவை வணிக வளாகங்களாக மாற்றப்பட்டது. அந்த வகையில் 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மகாராணி திரையரங்கமும், 1971இல் தொடங்கப்பட்ட ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கமும் மூடப்பட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது சம்பந்தமாக மகாராணி திரையரங்கின் உரிமையாளர் கோபால் தாஸ் அவர்களிடம் பேசினோம். “இந்தியா சுதந்திரம் பெற்ற இரண்டாவது வருடம் 1949இல் தொடங்கப்பட்ட மகாராணி தியேட்டர் கூட்டு குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது, எமது வம்சாவழி தோன்றல்கள் வெவ்வேறு துறைகளில் பயணப்பட்டதால் தொடர்ந்து திரையரங்கு தொழிலைத் தொடர இயலவில்லை” என்கிறார் 79 வயதாகும் கோபால் தாஸ்.

தமிழகத்தில் 71 வருடங்களை கடந்த திரையரங்கங்கள் குறைவாகவே உள்ளன. அந்த வரிசையில் மகாராணி தியேட்டரின் வரலாறு தவிர்க்க முடியாதது என்கிறார் ஃபிலிம் மீடியேட்டர் நாராயணன். வட சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 71 வயதை பூர்த்தி செய்திருக்கும் மகாராணி தியேட்டர் பற்றி 61 வயதை கடந்த நாராயணனின் அனுபவங்கள், “சென்னை நகரத்தில் நான்கு பிரிண்ட்டுகள் மட்டுமே வெளியான காலம் அது. வட சென்னை பகுதி மக்களின் பொழுதுபோக்கில் இரண்டறக் கலந்தது மகாராணி, கிரெளன், கிருஷ்ணா, மினர்வா, தமிழ்நாடு, பிரைட், தங்கம், பிராட்வே, பிரபாத் மற்றும் 1970களுக்கு பின் உருவான பாண்டியன், அகஸ்தியா, பாரத், எம்.எம் திரையரங்குகள்.

இத்திரையரங்குகளில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக முதன்மையான வசூல் முக்கியத்துவம் மிக்க தியேட்டராக இருந்த மகாராணியில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களும், அகஸ்தியாவில் சிவாஜி நடித்த படங்களும் வெளியாவது வாடிக்கை. எம்.ஜி.ஆர் விருப்பத்துக்குரிய திரையரங்காக மகாராணி இருந்ததால் அவர் நடித்த கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை ரிலீஸ் நேரங்களில் எம்.ஜி.ஆர் படத்திற்கு மட்டுமே முதலிடம் கொடுத்த திரையரங்கம் மகாராணி.

*நாராயணன்*

அவருக்கு பின்னால் வளர்ந்து வந்த நடிகர்களில் குறிப்பிட்ட நடிகரின் படங்களை திரையிடும் தியேட்டராக மகாராணி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை புனரமைத்துக் கொண்ட மகாராணி திரையரங்கம் தொடர்ந்து இயங்காமல் தனது பயணத்தை முடித்து கொள்ள முடிவு செய்திருப்பது வருத்தத்திற்குரியது. என்றாலும் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கிறது. படங்கள் திரையிடும் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு படம் ஓடி முடிந்தவுடன் அல்லது இன்வாய்ஸ் கிடைத்தவுடன் வசூல் பங்குத் தொகையை தாமதப்படுத்தாமல் வழங்கிய நிர்வாகம் மகாராணி என்பது குறிப்பிடத்தக்கது” என்றார் நாராயணன்.

தமிழ் சினிமாவின் முதன்மை அடையாளமாக இன்று வரை அனைத்து தரப்பினருக்கும் தெரிந்தது ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனம். கூட்டு குடும்பமாக அவர்கள் தொழில் செய்து வந்த நிலையில் 1971ஆம் ஆண்டு ஸ்டுடியோவின் ஒரு பகுதியில் கட்டப்பட்டது ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திரையரங்கம். சென்னை நகரத்தில் விசாலமான இட வசதியுடன் இயங்கி வந்த திரையரங்கம். தொடங்கப்பட்ட காலத்தில் புதிய படங்களை திரையிடுவதற்கு கடுமையான போட்டி இருந்து வந்தது. வட சென்னை, அண்ணாசாலை, எழும்பூர், வடபழனி இதனை மையமாக கொண்டு 4 பிரிண்ட் வெளியான காலத்தில், தி.நகர் கிருஷ்ணவேணி, உதயம், கமலா, லிபர்ட்டி, ராம் தியேட்டர் என சென்னை நகர விநியோக எல்லையில் இருப்பவற்றில் மட்டுமே தியேட்டரை ஒப்பந்தம் செய்ய இயலும். இதனால் செங்கல்பட்டு விநியோக பகுதிக்குள் ஜாஃபர்கான் பேட்டையில் இருந்த காசி, ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திரையரங்குகள் எந்த புதிய படத்தை திரையிடுவது என்கிற நெருக்கடியில் சிக்கித் தவித்தது உண்டு.

சென்னை நகர எல்லைக்குள் இயங்கி வந்த திரையரங்குகளில் மிக மிக குறைவான டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்பட்டது தி.நகர் பஸ் நிலையம் எதிரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டர். அதற்கு அடுத்தபடியாக ஏ.வி.எம்.ராஜேஸ்வரி தியேட்டரை கூறுவார்கள். இந்த திரையரங்கின் உள்கட்டமைப்புக்கு ஏற்றவாறு பிற திரையரங்குகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்த கட்டணம் போன்றே ஏ.வி.எம் ராஜேஸ்வரியிலும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது.

திரைத்துறை சார்ந்த தொழிலாளர்களின் குடும்பங்கள், உதவி இயக்குநர்கள் இத்திரையரங்கின் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர். திரையரங்கின் இருபுறமும் இயங்கிவந்த பழமையான கமலா, நேஷனல் திரையரங்குகள் நவீனத்திற்கு மாறிவிட்டது. அதனால் ஏ.வி.எம் வியாபார போட்டியில் பின் தங்கியது. ஏ.வி.எம் கூட்டு குடும்ப பிரிவினை காரணமாக திரையரங்கு முருகன் குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் திரையரங்கை அமைக்கும் அளவிற்கு போதிய இடவசதி இருப்பதால் திரையரங்கம், படப்பிடிப்பு தளம் அமைக்கலாமா என அதனை நோக்கி திரையரங்க நிர்வாகம் கவனத்தை திருப்பியுள்ளது என்கின்றனர் ஏவிஎம் வட்டாரத்தில்.

**-இராமானுஜம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share