சிறையிலிருந்து வயதானவர்களை விடுவியுங்கள்: ‘ஜோக்கர்’ நாயகன்!

entertainment

ஜோக்கர் படத்தின் நாயகன் ஜோவாகின் பீனிக்ஸ் கோவிட் -19 தீவிரமாகியுள்ளதால் சிறைக்கைதிகளை, குறிப்பாக வயதானவர்களை விடுவிக்குமாறு நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை வலியுறுத்தியுள்ளார்.

சென்றாண்டிற்கான சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் படத்தில் நடித்த ஜோவாகின் பீனிக்ஸ் பெற்றது நினைவிருக்கலாம். இப்படத்தில் இவர் நடித்த ஜோக்கர் கதாபாத்திரம் அடக்குமுறைக்கு எதிரான கலகக் குரலாகவே வெடித்தது. உலகெங்கும் பல போராட்டங்களில் ஜோக்கர் மாஸ்க் அணிந்தபடி மக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், 45 வயதான பீனிக்ஸ், தனது டிவிட்டர் பக்கத்தில், சிறையிலிருக்கும் வயதானவர்களை விடுவியுங்கள் என நியூயார்க் ஆளுநரிடம் கோரிக்கை வைத்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பீனிக்ஸ் அழைப்பு விடுத்தார்.

அவர் வெளியிட்ட பதிவில், “சிறையில் உள்ள நியூயார்க்கர்களுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் நியூயார்க்கில் நடவடிக்கை எடுக்க ஆளுநரை அழைக்கிறேன். பலரது வாழ்க்கை அவரின் நடவடிக்கையை பொருத்து தான் இருக்கிறது. கொரோனா வைரஸால் சிறையில் இறப்பது அநியாயம். நோய்த் தொற்றால் சிறையில் இறக்க யாருக்கும் தகுதியில்லை. சிறையிலிருந்து வயதானவர்களை விடுவியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட வீடியோவில், “சிறைகளில் கொரோனா வைரஸ் பரவுவது நம் அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் அச்சுறுத்துகிறது. நீங்கள் சிறைவாசம் அனுபவிக்கும் போது சமூக விலகல் மற்றும் நல்ல சுகாதாரத்தை உறுதிப்படுத்துவது இயலாத காரியம். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களையும் சிறைகளில் பணிபுரியும் நபர்களும் நோய்வாய்ப்படுவதையும் வைரஸ் பரவுவதையும் தடுக்க தலைவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்” என்று பீனிக்ஸ் கூறினார்.

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போது வரை, வைரஸ் தொற்றால் 6 லட்சத்து 44 ஆயிரத்து 348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்து 554 பேர் மரணமடைந்துள்ளனர்; 48 ஆயிரத்து 708 பேர் குணமாகியுள்ளனர்.

**முகேஷ் சுப்ரமணியம்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *