d17 ஆண்டு சாதனையை தக்கவைக்குமா இந்தியா?

Published On:

| By Balaji

இன்று (டிசம்பர் 22) மதியம் 1.30 மணிக்கு இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையான மூன்றாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் அமைந்துள்ள பராபதி மைதானத்தில் நடக்கிறது.

**பிட்ச் ரிப்போர்ட்**

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையே நடக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளது. கட்டாக்கில் அமைந்துள்ள பராபதி மைதானத்தில் இந்தியா, இதுவரை 16 ஒருநாள் போட்டிகளில் ஆடி 12 வெற்றி, 4 தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக 2017ம் ஆண்டு இங்கிலாந்து உடன் நடந்த ஒருநாள் போட்டியில் வெற்றி என முடிவுகளைப் பெற்றுள்ளது. முதலில் பேட் செய்து 381 ரன்கள் எடுத்தது, இங்கிலாந்து 366 ரன்கள் எடுத்து போராடி தோற்றுப்போனது. எனவே வெஸ்ட் இண்டீஸ் உடன் நடக்கும் இந்த போட்டியில் சிக்ஸர் மழை எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி முதலில் பேட் செய்தால் அதிக ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது, இந்திய வேக பந்துவீச்சாளர்கள் மீது சற்று நம்பிக்கை இருந்தாலும் 350 ரன்களுக்கு மேல் எடுப்பது இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பை அதிகமாக்கும்.

**ரோஹிட் ஷர்மா இன்னும் 9 ரன்கள் எடுத்தால்…**

அதுமட்டும் இன்றி 1997ம் ஆண்டில் மட்டும் இலங்கை துவக்க ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இணைந்து மொத்தமாக 2, 387 ரன்கள் எடுத்துள்ளார். இன்றுவரை எந்த துவக்க ஆட்டக்காரரும் அந்த சாதனையை முறியடித்தது இல்லை. ஆனால் இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோஹிட் ஷர்மா இந்த ஆண்டு மட்டும் டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இணைந்து 2379 ரன்கள் எடுத்துள்ளார். எனவே ஜெயசூர்யாவின் சாதனையை முறியடிக்க இன்னும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த சாதனையை இன்று ரோஹிட் ஷர்மா படைப்பார் என்று கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இன்றி இன்னும் 73 ரன்கள் எடுத்தால் 2019ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 1500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெறுவார் ரோஹிட் ஷர்மா.

**பராபதியும் கோலியும்**

பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாடுவதற்கு ஏற்ற இந்த மைதானத்தில் விராட் கோலி மூன்று ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் முறையே 3, 22, 1, 8 என மொத்தமாகவே 34 ரன்கள் மட்டுமே எடுத்து ஏற்கனவே ஏமாற்றியிருக்கிறார். இம்முறை இந்த ரெக்கார்டை கோலி உடைப்பார் என்பதும் முக்கிய எதிர்ப்பார்ப்புகளில் முதன்மையானது.

**இந்தியாவின் 17 வருட சாதனை தொடருமா?**

2002 ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டுவரை இந்தியாவை இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியதில்லை. வெஸ்ட் இண்டீஸ் கடைசியாக 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஒரு நாள் தொடரில் 4-3 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அதன் பிறகு இவ்விரு நாடுகளுக்கு இடையே நடந்ந்த 9 ஒரு நாள் போட்டித் தொடர்களை இந்தியாவே கைப்பற்றியுள்ளது. இப்போது, 10வது முறையாக வென்று அந்த சாதனையை விராட் கோலி தக்கவைப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share