ஜூலை மாதம் இலங்கையில் நடக்கும் கிரிக்கெட் தொடருக்கான சுற்றுப்பயணத்திற்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள் குறித்த தெளிவான அறிவிப்புகளுக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று ஒரு நாள் போட்டிகள், மூன்று 20-20 போட்டிகளுக்கான தொடர் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுக்காக தற்போது நாடுமுழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த கிரிக்கெட் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் சிங் துமால் ராய்ட்டர்ஸிடம் தொலைபேசி மூலம், இதுவரை எதுவும் முடிவு செய்யப்படவில்லை, ஏனென்றால் பயணக் கட்டுப்பாடுகள் என்னவாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இது குறித்த எந்த தெளிவும் தற்போது எங்களிடம் இல்லை. எனவே தெளிவான முடிவுக்காக நாங்கள் காத்திருந்து அதற்கேற்ப அழைப்பு விடுப்போம்” என்று தெரிவித்தார்.
இந்தியா நாடு தழுவிய லாக்டவுனை நான்காவது முறையாக நீட்டித்து மே 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதே நேரத்தில் இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து வணிக விமானங்களும் குறைந்தபட்சம் மாத இறுதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை மேலும் நீட்டிக்கப்படுமா என்றும் உறுதியாக கூறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பயணம் குறித்த கட்டுப்பாடுகள், உலகளாவிய தொற்று நிலவரம், வீரர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் இதில் அடங்கியிருப்பதால் உடனடியாக முடிவெடுப்பதில் சிக்கல்கள் உள்ளதென கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தியாவைத் தொடர்ந்து, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் நடைபெறும் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் பங்களாதேஷ் அணி இதேபோல் எச்சரிக்கையாக இன்னும் அழைப்புவிடுக்காமல் இருக்கிறது. பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரி ESPNcricinfo இடம் இது குறித்து கூறியபோது, “பங்களாதேஷில் பயணக் கட்டுப்பாடுகள், இரு நாடுகளிலும் பின்பற்றப்படும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நெறிமுறைகள் குறித்து நாங்கள் கவனிக்க வேண்டியுள்ளது. வீரர்களின் தயார்நிலை குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். இது குறித்த பிற விவரங்களை வரையறுக்க வேண்டியுள்ளது”என்று கூறினார்.
மறு அறிவிப்பு வரும்வரை இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ள நிலையில், இலங்கையுடனான கிரிக்கெட் தொடரும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”