தலையில் அறுவை சிகிச்சை நடக்கும் போது உணவு சமைத்த பெண்!

Published On:

| By Balaji

அறுவை சிகிச்சை என்று கேட்டால் அனைவரும் அலறி அடிக்கும் சூழலில், இத்தாலியை சேர்ந்த 60 வயது பெண்மணி ஒருவர் தலையில் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த நேரத்தில், உணவு தயார் செய்ததன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த பொழுது ஒருவர் வயலின் வாசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதே போன்று மூளையில் ஏற்பட்ட கட்டியை மருத்துவர்கள் நீக்கம் செய்து கொண்டிருந்த நேரத்தில், இத்தாலியை சேர்ந்த ஜிம் மர்ஃபி என்பவர் செல்ஃபி எடுத்து அதனை வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்பிய சம்பவமும் சமூகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டது. அதே போன்று அறுவை சிகிச்சை நேரத்தில் பெண்மணி ஒருவர் உணவு தயார் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இத்தாலியின் அன்கோனா நகரை சேர்ந்த 60 வயது பெண்மணி ஒருவருக்கு மூளையில் திடீரென ரத்தம் உறைந்து கட்டி ஏற்பட்டது. தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். சிக்கலான இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல் பாகங்கள் செயலிழந்து போவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

அவ்வாறு ஏற்படாமல் இருப்பதற்காக அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் பொழுது அவரது உடல் பாகங்கள் சரியாக இயங்குகிறதா என்பதை அறிந்துகொள்ள ஏதேனும் ஒரு செயலில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அவர் உணவு தயார் செய்ய திட்டமிட்டார்.

quando pensate di essere bravi in cucina, sappiate che questa signora di 60 anni ha preparato 90 olive all’ascolana in circa un’ora di intervento di rimozione di un tumore al lobo temporale sinistro del cervello pic.twitter.com/LCtPktf7NG

— awkward blob (@autoportante_) June 9, 2020

அதன்படி, அவரது தலை மட்டும் வெளியில் தெரியுமாறு செய்து உடல் முழுவதும் துணியால் மறைத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தனர். 11 நரம்பியல் நிபுணர்கள் இணைந்து இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தனர். இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சைக்கு இடையே அந்தப் பெண் இத்தாலியின் பிரபல உணவு வகையான ‘ஆலிவ் ஆஸ்கோலன்’களைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.

அவ்வாறு அவர் அறுவை சிகிச்சை முடிவதற்குள் 90 ஸ்டஃப்ட் ஆலிவ் ஆஸ்கோலன்கள் தயாரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை நேரங்களில் உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்தை கண்காணிப்பதற்காக இவ்வாறு ஏதேனும் செயலை செய்ய நோயாளிகளை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மன உறுதியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share