zஒரே நாளில் அறிவிக்கப்பட்ட ஆறு புதுப்படங்கள்!

Published On:

| By Balaji

கொரோனாவுக்குப் பிறகு வெயிட்டிங்கில் இருக்கும் முடிக்க வேண்டிய படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுவென தொடங்கி நடந்துவருகின்றன. சமீபமாக தான் புதுப்படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அப்படி, நேற்று ஒரே நாளில் ஆறு புதுப்படங்கள் குறித்த அறிவிப்புகள் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளது.

**01. சூர்யா தயாரிப்பில் அருண்விஜய் மகன் !**

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் அருண்விஜய் மகனான ஆர்னவ் லீட் ரோலில் நடிக்க ஒரு படம் உருவாக இருக்கிறது. பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்றுப் படங்களைத் தொடர்ந்து, சூர்யா தயாரிக்கும் படம் இது. சூர்யா தயாரித்த பசங்க 2 படத்தைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கான சினிமாவாக இது உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை சரோவ் சண்முகம் இயக்கவுள்ளார். ஒட்டுமொத்தக் கதையுமே ஊட்டியின் பின்னணியில் இருக்கும் எனவும், விரைவிலேயே படக்குழு படப்பிடிப்புக்குச் செல்ல இருக்கிறது.

**02. சசிகுமார் நடிக்கும் பகைவனுக்கு அருள்வாய்**

சசிகுமார் நடிக்கும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று படப்பூஜையுடன் தொடங்கியது. ஜெய், நஸ்ரியா நடித்த ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ இயக்குநர் அனிஸ் இயக்கத்தில்தான் இந்தப் படம் உருவாக இருக்கிறது. படத்தை 4 மங்கீஸ் ஸ்டூடியோ தயாரிக்கிறது. சசிகுமாருடன் வாணி போஜன், பிந்து மாதவி, நாசர், சதீஷ், நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இசை ஜிப்ரான்.

**03. ஹிப் ஹாப் ஆதி – விதார்த் நடிக்கும் ‘அன்பறிவு’**

கமர்ஷியலாக ஹிட் படங்களைக் கொடுப்பவர் ஹிப் ஹாப் ஆதி. வித்தியாசமானக் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் விதார்த். இவர்கள் இருவரும் இணையும் படம் ‘அன்பறிவு’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளது. அட்லியிடம் உதவியாளராக இருந்த அஸ்வின் ராம் இந்தப் படத்தை இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ஹிப் ஹாப் ஆதி, நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வசி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

**04. ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘தீங்கிரை’**

இந்தப் படமும் இரண்டு ஹீரோ கதைக்களம் கொண்ட படமாக உருவாகிறது. 8 தோட்டாக்கள் நாயகன் வெற்றி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் படம் ‘தீங்கிரை’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. படத்தை அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவ் இயக்கவுள்ளார். நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கெளசிக், இசையமைப்பாளராக பிரகாஷ் நிக்கி, கலை இயக்குநராக ராகுல் ஆகியோர் பணியாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.

**05. அசோக் – ப்ரியா பவானி ஷங்கர்**

நடிகர்களான அசோக் செல்வன், ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தை ‘சதுரம் 2’ இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். நாசர், முனீஸ்காந்த், ரவிமரியா, யோகி உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். சென்னையில் நேற்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படத்துக்குத் தலைப்பு மட்டும் இன்னும் படக்குழு உறுதி செய்யவில்லை. படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

**06. உறுதியான ஹரி – அருண்விஜய் படம்**

நீண்ட நாளாக உறுதியாகாமல் இருந்த இயக்குநர் ஹரி – அருண்விஜய் கூட்டணி நேற்று உறுதியாகியுள்ளது. பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகிறதாம். சூர்யாவுக்கு சொன்ன அருவா கதையை அருண்விஜய்யை வைத்து எடுக்கிறாரா அல்லது வேறு புதிய படமா என்பது விரைவில் உறுதியாகிவிடும். இது, அருண்விஜய்யின் 31ஆவது படமென்பது கூடுதல் தகவல். சர்ப்ரைஸ் என்னவென்றால், காலை அருண்விஜய் மகன் நடிக்கும் பட அறிவிப்பு வெளியானது. அப்படியே மாலை அருண்விஜய் நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

**-ஆதினி**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel