மீண்டும் அப்பா தயாரிப்பில் ஜீவா

Published On:

| By Balaji

.

திரைத் துறையில் இன்றுவரை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரிப்பு, விநியோகம் என உயிர்ப்புடன் இருப்பது சூப்பர்குட் நிறுவனம் மட்டுமே. சூப்பர் குட் ஆர்.பி.சவுத்ரியின் மகனான ‘ஜீவா’ அப்பா தயாரிப்பில் 2003ல்ஆசை ஆசையாய் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன்பிறகு அப்பா தயாரிப்பிலேயே தித்திக்குதே படத்தில் நடித்தார். தொடர்ந்து சில படங்களை மகனுக்காக தயாரித்தார் ஆர்.பி.சவுத்ரி. கடைசியாக ஜீவா நடித்த களத்தில் சந்திப்போம் படத்தை தயாரித்தார்.

ஜீவா தற்போது கோல்மால், மேதாவி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் அப்பாவின் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வரலாறு முக்கியம் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்குகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்த காஷ்மீரா நாயகியாக நடிக்கிறார்.

இவர்கள் தவிர பிரக்யா நாகரா, விடிவி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை உள்பட பலர் நடிக்கிறார்கள். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார்.

சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share