t‘வாடிவாசல்’ பயிற்சி: வாழ்த்து சொன்ன சூர்யா

Published On:

| By admin

நடிகர் சூர்யா ‘வாடிவாசல்’ படப்பிடிப்புக்காக தீவிர பயிற்சியில் உள்ளார்.

இன்று தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பல பிரபலங்களும் ரசிகர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை காலையில் இருந்து சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

காளை மாடு ஒன்றை பிடித்து வரும்படியான அந்த வீடியோவில், ‘என் தமிழ்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!’ என சூர்யா பேசியுள்ளார். நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் பாலாவின் படத்திற்காக கன்னியாகுமரியில் உள்ளார். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு பிறகு இயக்குநர் பாலாவும் சூர்யாவும் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். சூர்யாவின் சினிமா பயணத்தில் முக்கிய படங்களாக ரசிகர்களால் பார்க்கப்படும் ‘நந்தா’ மற்றும் ‘பிதாமகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் பாலா.

இருபது வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சூர்யா அங்கு, திருவள்ளுவர் சிலையை பார்ப்பது போன்ற புகைப்படத்துடன் ’முதல் முறையாக’ என்ற கேப்ஷனுடன் பகிர்ந்திருந்தார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்து வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பில் இணைய இருக்கிறார்.

சமீபத்தில் சென்னையில் ஜல்லிக்கட்டு களம் செட் போடப்பட்டு அதற்கான டெஸ்ட் ஷூட் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போது, கன்னியாகுமரியில் பாலா படப்பிடிப்புக்கு இடையில் ‘வாடிவாசல்’ படத்திற்காக காளை மாடுகளுடன் பயிற்சியில் சூர்யா உள்ளார் என்பது இந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share