விக்ரம் படத்திலிருந்து ராகவா லாரன்ஸ் விலக காரணம் !

entertainment

ஒரு இயக்குநரின் வெற்றியென்பது அடுத்து அவர் இயக்க இருக்கும் படத்தின் மீதான ரசிகனின் எதிர்பார்ப்பினை வைத்து மதிப்பீடு செய்யலாம். அப்படி, லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார்.

கார்த்தி நடிக்க கைதி கொடுத்தார் லோகேஷ். இப்படம் ஹிட்டாக விஜய்யின் மாஸ்டர் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அடுத்து மாஸ்டரும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துவிட்டது. இந்நிலையில், அடுத்து கமல்ஹாசன் நடிக்க விக்ரம் படத்தின் பணிகளில் இறங்கியிருக்கிறார்.

அனிருத் இசையில் கமல்ஹாசன் நடிப்பில் டான் ஸ்டோரியாக உருவாக இருக்கிறது விக்ரம். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தைப் பரபரப்புடன் முடித்திருக்கும் கமல், உடனடியாக விக்ரம் படத்தை துவங்குகிறார். அதனால், சமீபத்தில் லோகேஷ் கனகராஜினை அழைத்துப் பேசினார்.

பொதுவாக, பெரிய பட்ஜெட் படங்களில் நடிகர்கள் மாற்றம் இயல்பாக நடக்கும். அப்படி, கமல்ஹாசனுக்கு வில்லனாக ‘விக்ரம்’ படத்தில் ராகவா லாரன்ஸ் முதலில் நடிக்க ஒப்பந்தமானார். தற்பொழுது, வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் ஒப்பந்தமாகியிருப்பது உறுதியாகியிருக்கிறது.

கமல் படத்திலிருந்து ஏன் ராகவா லாரன்ஸ் வெளியேறினார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் ருத்ரன் படம் தயாராகிவருகிறது. இந்தப் படத்தின் பணிகளில் பிஸியாக இருக்கிறார் . அதோடு, வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படம், மே மாதம் துவங்க இருக்காம். அதே மே மாதம் விக்ரம் படத்தையும் துவங்க இருக்கிறார்கள். சந்திரமுகி 2 முதலில் ஒப்பந்தமாகிவிட்டதால், விக்ரம் படத்துக்கு தேதி ஒதுக்க முடியாத காரணத்தால் தான் விலகிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த இரண்டு வாரங்களில் நெட்ஃப்ளிக்ஸில் இருள் மற்றும் பிரைம் வீடியோவில் ஜோஜி படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. தமிழிலும், சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் & சமந்தாவுடன் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்திருக்கிறார்.

**- தீரன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *