gவைரமுத்துவுக்கு எதிராக உலக தமிழர்கள்!

entertainment

தமிழ் சினிமாவில் தமிழர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க இயக்குநர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

பிற மாநிலத்தவர்களுக்கே வாய்ப்புகள் அதிகமாக வழங்கப்படுகிறது என்கிற குற்றசாட்டு தொடர்ச்சியாக இருந்து வருகிறது. முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் பிற மாநிலம், வெளிநாடுகளில் நடத்தப்படுகிறபோது தமிழ் சினிமாவை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர்.

இவை காலங்காலமாக தொடர்ந்து வருகிறது என்கிற ஆதங்கம் கோடம்பாக்கத்தில் எதிரொலிக்காத நாட்கள் இல்லை. மறைந்த மகா சந்நிதானம் குன்றக்குடி அடிகளார் ஆன்மிகத்தையும், தமிழ்மொழி வளமை, தமிழர்கள் முன்னேற்றம் பற்றி வாழ்நாள் முழுவதும் தான் பேசும் மேடைகளில் அரங்கம் அதிர பேசியவர். அவர் நடுவராகப் பங்கேற்கும் பட்டிமன்றங்களில் தொடக்கத்தில் அல்லது இறுதியில் ‘உலகத்திலேயே மிகுந்த சகிப்புதன்மை நிரம்பியவர்கள் தமிழர்கள். எல்லோருக்கும் இடம்கொடுப்பார்கள். தன்னோடு இருக்கும் தமிழர்களுக்கு இடம் தருவதில்லை. பாதிக்கப்படும் தமிழன் சக தமிழனை தட்டிக் கேட்கிறபோது தமிழகம் தலைநிமிரும்’ என்பார்.

அவர் கூறியது போன்று தமிழ், தமிழ் இனம் என்று கூறி பிழைப்பு நடத்துகிறவர்கள், இன்றைக்கு தமிழனை அழிக்க யுத்தம் நடத்தியவர்களின் வாரிசுகளைத் தேடிப் பிடித்து பாட்டுப்பாட இலங்கையில் இருந்து அழைத்து வந்திருக்கிறார்கள்.

அதுவும் தமிழாற்றுப்படை படைத்துவரும் பாடலாசிரியர் வைரமுத்துவும், அவரது மகன் மதன் கார்க்கியும் என்கிறார்கள். கோடம்பாக்கத்தில். என்னதான் நடந்தது என்கிற விசாரணையில் இறங்கியபோது…

“ சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கதாநாயகனாக நடிக்கும் படம் 2019 டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. ஜேடி – ஜெர்ரி இரட்டையர்கள் இயக்குகிறார்கள்.

இந்தப் படத்தில் புதுமுக நடிகை கீதிகா திவாரி நடிக்கிறார். நடிகர்கள் பிரபு, விவேக், விஜயகுமார், மயில்சாமி, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட பெரிய கூட்டம் இந்தப் படத்தில் இருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மதன் கார்க்கி மற்றும் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள்.

படத்தில் இடம்பெறவிருக்கும் ஒரு பாடலைப் பாட அண்மையில் இலங்கையில் புகழ்பெற்றிருக்கும், சிங்களப் பாடகி யோகானியை அழைத்துப் பாட வைத்திருக்கிறார்கள்.

அக்டோபர் 6ஆம் தேதி அவரை மும்பைக்கு வரவழைத்து மதன் கார்க்கி எழுதிய பாடலைப் பாட வைத்திருக்கிறார்கள்.

அவருடன் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் மதன் கார்க்கி ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார். அதற்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

அந்தப் பாடகி யோகானி, சிங்கள ராணுவ தளபதி பிரசன்ன டி சில்வாவின் மகள். சிங்கள இனவெறியர்கள் தமிழர்கள் மீது நடத்திய போரைப் புகழ்ந்து பாடிய பெண் பாடகி. அந்தப் பாடகியைப் பரிந்துரைத்ததே வைரமுத்துதான் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக நிறைய எதிர்ப்புகள் வந்ததால், ட்விட்டரிலிருந்து அந்தப் புகைப்படத்தை நீக்கிவிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ். இதனால், அந்தப் பெண் பாடிய பாடலையும் நீக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாடலை நீக்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.

இந்தத் தகவல் தெரிந்து தமிழ் உணர்வாளர்கள் கூடுதல் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்களாம்.

இதற்கிடையே மும்பையில் பாட்டுப் பாடிவிட்டு கொழும்பு சென்ற யோகானிக்கு சிங்கள ராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு கொடுக்கப்பட்ட காணொலிகள் பகிரப்பட்டு வருகின்றன.

இலங்கை அரசால் ராணுவத் தளபதிகளுக்கும் மற்றும் அதிமுக்கியத்துவம் மிக்க அரசியல்வாதிகளுக்கும் மட்டுமே கிடைக்கும் ராணுவப் பாதுகாப்பு யோகானிக்குக் கிடைக்கிறது என்றால் இவர், இலங்கை அரச பயங்கரவாதத்தால் ப்ரோமட் செய்யப்படுபவர் என்பது உறுதியாகிறது. இவரை அங்கீகரிப்பது தமிழர்கள் படுகுழியில் விழுவது போன்றது என்று எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன.

இவ்வளவையும் மீறி அந்தப் பாடலைப் பயன்படுத்துவார்களா, இல்லையா என்பது போகப்போகத் தெரியும். எதிர்ப்புகளை மீறிப் பாடலைப் பயன்படுத்தினால் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடாமல் புறக்கணிக்க திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திடம் முறையிட தமிழ் உணர்வாளர்கள் முயற்சியைத் தொடங்கியுள்ளனர். கலைக்கு மொழி இல்லை என்றாலும் தமிழர்களை இன்றுவரை வேட்டை பொருளாக கருதும் சிங்களர்கள் மத்தியில் இருந்து பாடகிக்கு பாட வாய்ப்பு கொடுத்ததைத் தவிர்த்திருக்கலாம் என்கின்றனர், தமிழ் சினிமாவில் இருக்கும் தமிழ் இயக்குநர்கள். தேவைப்பட்டால் இது சம்பந்தமாக தமிழக முதல்வரிடம் முறையிடவும் தயாராகி வருகின்றனர், தமிழை தாய்மொழியாகக் கொண்ட இயக்குநர்கள்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *