தவமாய் தவமிருந்து படத்தில் ஆகாட்டி பாடல் மூலம் பறையிசை கலைஞராக அறிமுகமானவர் புதுவை சித்தன் ஜெயமூர்த்தி. ஈழ ஆதரவு, தமிழ் தேசியம் என பல தளங்களில் தீவிர செயல்பாட்டாளராகத் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டவர் ஜெயமூர்த்தி.
ஈழ கவிஞர்கள்,தமிழக கவிஞர்கள், திரைப்பட பாடலாசிரியர்கள் எழுதியுள்ள பாடல்களுக்கு ஜெயமூர்த்தி இசையமைத்துள்ள இசை தொகுப்பு இந்த மண் எங்களின் சொந்த மண்” பெயரில் வெளியிடப்பட்டது. இதற்கான விழா நேற்று (13.03.2021) மாலை சென்னை சாலிகிராமம் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது திரைப்பட இயக்குநர்கள் மு.களஞ்சியம், சேரன், சங்க தலைவன் மணிமாறன் கிராமிய பாடகி சின்னப்பொண்ணு, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், திருக்குமரன், கவிஞர் இளைய கம்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சேரன், ”இந்த மண் எங்களின் சொந்த மண்.. என்று சொல்லுகிற இடத்தில் இருப்பது யாரென்றால் அதற்கு நாம்தான் ஒரு வகையில் காரணம்.
எந்த இடத்தில் போராட வேண்டுமோ, எந்த இடத்தில் குரல் கொடுக்க வேண்டுமோ, எந்த இடத்தில் எதிர்த்து நிற்க வேண்டுமோ, எந்த இடத்தில் நமது உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அழுத்திச் சொல்ல வேண்டுமோ அந்த இடத்திலெல்லாம் நாம் மவுனமாக, சகித்துக் கொண்டு இருக்கப் பழகிவிட்டதன் விபரீதம் தான், இன்று நாம் இந்த மண் நமது சொந்த மண் என்று சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறோம்!
மழுங்கி போனவர்கள் தமிழர்கள் என்று வரலாற்றில் பதிவு ஆகிவிடுமோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. அப்படி ஒரு இக்கட்டான இடத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். நமது போராட்டமும், நமது குரலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நமது உரிமைக்காகவும், போராட்டத்திற்காகவும் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை.
எந்த மாற்றமும் நிகழவில்லை. அதற்குக் காரணம், இங்கு நிலவும் அரசியல்.! மக்களுக்காக பணியாற்றக் கூடிய ஒரு தலைவன் இன்னும் தமிழகத்தின் ஆட்சி அதிகார தலைமை நாற்காலியில் அமரவில்லை. அதுதான் இங்குப் பிரச்சினை.
அப்படி ஒருவர் நமக்காக அமர்ந்திருந்தால் ஈழத்தில் நமது மக்கள் கொல்லப்படும்போது அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கும். நமக்கான நியாயம் கிடைத்திருக்கும். இங்கு எல்லாமே நாடகங்களாகவே இருக்கிறது. மக்களை மயக்க பிஸ்கட் கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நம்மை யோசிக்க முடியாத அளவுக்குப் புதிது புதிதாகப் பிரச்சினைகளை உருவாக்கி நமது கவனத்தைத் திசை திருப்புகின்றனர்
இது அவர்கள் மீதான குற்றமில்லை. நமது இயலாமையை, நமது பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வருகிறவர்களுக்கு நாம் சாமரம் வீசிக் கொண்டிருக்கிறோம்! நமக்காகக் குரல் கொடுப்பவர்களை, நமக்காகச் சிந்திப்பவர்களை நாம் ஒதுக்கித்தள்ளுகிறோம், அங்கீகரிப்பதில்லை இதில் இருந்துவிழித்துக் கொண்டால் மட்டுமே எழுச்சியும் மாற்றமும் நிகழும்!
நம்மை சோம்பேறிகளாக்கி, இலவசங்களுக்கு அடிமையாக்கி, நம்மை அவர்களுக்கான ஆட்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.. முதலில் மக்களிடமிருந்து புரட்சி எழவேண்டும். அதன்பிறகுதான் மாற்றம் நிகழும்!
மக்களுக்காகப் போராடுகிறவர்களை மக்கள் இன்னும் கண்டுகொள்ளவே இல்லை. அரிதாரம் பூசியவர்களின் முகமும், கவர்ச்சியும்தான் மக்களுக்கு தேவைப்படுகிறது. அந்த கவர்ச்சிதான் நம்மை ஐம்பதாண்டுக் காலம் பின்னோக்கி இழுத்துவிட்டது. திரும்பவும் அந்த கவர்ச்சியின் பின்னால் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். நான், இயலாமையில் பேசவில்லை, கோபத்தில் பேசவில்லை, அனைத்தையும் உள்ளத்தில் போட்டு விழுங்கி நானும் அமைதியாக இருக்கும் ஒரு சராசரி மனிதனாகி விட்டேன். ஆகவே இந்த மண் நமது சொந்த மண் என்று சொல்லுவதற்குக் காரணமே நாம் தான் என்பதைச் சிந்தித்துப்பார்க்கவேண்டும்” என்றார். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் பாடல்களை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
**-இராமானுஜம்**
�,”