ஜோகன்னஸ்பெர்க்கில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்க இந்தியாவுக்கு 8 விக்கெட்டுகளும் தென்னாப்பிரிக்காவுக்கு 122 ரன்களும் தேவை என்கிற நிலையில் இன்று (ஜனவரி 6) நடக்கவிருக்கும் ஆட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்று முன் தினம் (ஜனவரி 4) ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்து இருந்தது.
இந்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (ஜனவரி 5) மதியம் தொடங்கியது. ரஹானே 58 ரன்களிலும், புஜாரா 53 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு தென்னாப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்க இந்தியாவுக்கு 8 விக்கெட்டுகளும் தென்னாப்பிரிக்காவுக்கு 122 ரன்களும் தேவை என்கிற நிலையில் இன்று (ஜனவரி 6) நடக்கும் ஆட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியா வெற்றி பெற்றால் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும். தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால் தொடர் சமன் நிலையை அடையும்.
**-ராஜ்**
.�,