இருக்கும் வியாதிகளிலேயே மிகவும் கொடியது நம்மை பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
புதுப்பேட்டை திரைப்படத்தின் இரண்டாம் பாக வேலைகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் செல்வராகவன், கொரோனா லாக் டெளன் காரணமாக சமூக வலைதளங்களில் முழு ஈடுபாட்டுடன் இயங்கி வருகிறார். தனது ரசிகர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும்விதமாக அவர் கூறும் கருத்துகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அந்த வகையில், அனைவருக்கும் நேர்மறை எண்ணம் ஏற்படும் விதமாக, “இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டே வாழ்வதுதான். அது நிம்மதியை அடியோடு ஒழித்து விடும். கடவுள் யாரையும் குறைத்துப் படைப்பதில்லை. நான் மிகச் சிறந்தவன் என்பதை எப்பொழுதும் நினைப்போம்!” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் வேறொரு பதிவில் **“நம்மில் பாதி பேர் வெறித்தனமாய் உழைக்காமலேயே கடவுளிடம் கூலி மட்டும் கேட்கிறோம்!”** என்றும் கூறியிருந்தார்.
சில தினங்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 14 வயதில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து தனக்குத்தானே கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். உடலில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாகச் சிறுவயதில் தான் கடந்துவந்த கேலி கிண்டல்களையும், அவமானங்களையும் குறிப்பிட்டு 14 வயது தனக்கு, வாழ்க்கையில் பல வெற்றிகளைக் கண்ட தற்போதைய செல்வராகவன் எழுதுவதாக அதில் அவர் எழுதியிருந்தார்.
இவ்வாறு தனக்கும், பிறருக்கும் நம்பிக்கை ஊட்டும் விதமாக செல்வராகவன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் கருத்துகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”