கொரோனா அச்சம் காரணமாக உலகம் முழுவதும் முடங்கிப் போயிருக்கும் நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி பெரும்பாலான நாடுகளில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டம் கூடும் பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் மக்கள் சமூக இடைவெளியுடன் திரைப்படம் பார்க்க புதிய உத்தி ஒன்றை அவர்கள் கையாண்டுள்ளனர். அதன்படி அங்கு ஓடும் சீன் நதியில் படகுகளில் பயணித்தவாறு, திரையில் திரைப்படங்களைக் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு வருடமும் கோடை கால கொண்டாட்டமாக ‘பாரீஸ் பிளேஜஸ்’என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வருட கோடை கொண்டாட்டங்களை எல்லாம் கொரோனா முடக்கியிருக்கும் நிலையில், பாரீசின் எம்.கே-2 சினிமா நிறுவனம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையோடு, சீன் நதியில் மக்களை மகிழ்விக்கும் விதமாக இந்த மிதக்கும் திரையரங்கை அமைத்துள்ளது.
அதன்படி பாய்ந்தோடும் சீன் நதியின் மீது படகுகளில் மிதந்தவாறே திரைப்படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு மிதக்கும் மிதவைப் படகுகள் ஒவ்வொன்றிலும் நான்கு முதல் ஆறு பேர் வரை ஒரே நேரத்தில் அமர்ந்து படம் பார்க்கலாம். அது மட்டுமின்றி நதிக்கரையில் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ள நாற்காலிகளிலும் மக்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் 174,674 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 30,152 மக்கள் கொரோனா காரணமாக உயிரிழந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர். கொண்டாட்டங்களையும், மகிழ்ச்சிகளையும் மறந்து வைரஸுடன் வாழ்க்கைக்காக போராடி வந்த அந்த மக்களுக்கு இந்த படகு திரையரங்க அனுபவம் புது உற்சாகத்தைத் தந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 125 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்புகள் குறையும் பட்சத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் திரையரங்குகளை திறக்கத் தாங்கள் தயார் நிலையில் இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தமிழகத்தில் திரையரங்குகளை மீண்டும் திறக்க இப்போதைக்கு தளர்வுகள் வழங்கப்பட மாட்டாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,