நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் தற்போது நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கொரோனா அச்சம் காரணமாக அவர் அதிகம் வெளியே செல்லாமல் வீட்டிலேயே தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று (ஜூலை 18) தமிழகக் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போனில் அழைத்துப் பேசிய மர்ம நபர் ஒருவர் நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறிவிட்டு திடீரென இணைப்பைத் துண்டித்துள்ளார். இது குறித்து நீலாங்கரை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்குமார் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்தச் சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை, எனவே அந்த மிரட்டல் போலியானது எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியுடன் அந்த செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து விசாரணை நடத்தினர். அதில் மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விழுப்புரம் போலீஸாருக்கு இது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர்களின் வீடுகளுக்கு இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் சமீப நாட்களாகத் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. கடந்த ஜூன் 18ஆம் தேதி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் அது புரளிதான் என்றும், மிரட்டல் விடுத்தவர் கடலூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் எனவும் கண்டறியப்பட்டது.
அதேபோன்று ஜூலை 4ஆம் தேதி சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதுவும் புரளிதான் எனப் பின்னர் கண்டறியப்பட்டது. அந்த விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஸ்வர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,