கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் மகனுடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் பாக்ஸிங் விளையாடும் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த சனிக்கிழமை(மார்ச் 7) உலக சாலைப் பாதுகாப்பு தொடருக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய லெஜெண்ட்ஸ் அணிகளுக்கிடையான இந்தப் போட்டியில் இந்திய லெஜெண்ட்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சேவாக் உள்ளிட்டோர் விளையாடினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சச்சின் களமிறங்கிய இந்த ஆட்டத்தில் அவர் 36 ரன்கள் எடுத்திருந்தார். இந்தப் போட்டி ரசிகர்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில் மேலும் உற்சாகமளிக்கும் விதமாக சச்சினின் க்யூட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் மகன் இம்ரான், சச்சினுடன் செல்லமாக விளையாடும் அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அந்த வீடியோவை இர்ஃபான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
#Imran didn’t realise what he did ???? he will when he grows up… #boxing @sachin_rt paji???? pic.twitter.com/RL81yBoYmX
— Irfan Pathan (@IrfanPathan) March 8, 2020
அந்த வீடியோவில் டேபிள் ஒன்றின் மீது நிற்கும் இம்ரான், சச்சினிடம் ‘நான் தான் உயரமானவன்’ என்று கூறுகிறார். அதற்கு ‘அங்கிள் தான் உயரமானவர்’ என்று அருகில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். சச்சினும் தான் தான் உயரமானவர் என்றுகூறி இம்ரானுடன் விளையாடுகிறார். ‘சரி உங்களில் யார் வலிமையானவர்’ என்று கேட்டதும், தான் வலிமையானவர் என்பதைக் காண்பிக்க இம்ரான் சச்சினை இடிக்கிறார். சச்சினும் அவருடன் இணைந்து செல்லமாக பாக்ஸிங் செய்வதாக அந்த வீடியோ உள்ளது.
இந்த வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இர்ஃபான், “இம்ரான் என்ன செய்தார் என்று அவருக்குத் தெரியாது. அவன் வளரும்போது சச்சினுடன் பாக்ஸிங் செய்தது தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைவரது கவனத்தையும் ஈர்த்த இந்த வீடியோ, பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”