கொரோனா பாதிப்பால் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியை பாதியிலேயே ஒத்திவைத்ததால் கிரிக்கெட் வாரியத்துக்கு 2,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களை செப்டம்பரில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ஐபிஎல் ஆட்டங்கள் தென்னாப்பிரிக்காவில் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த (2020) ஆண்டு ஐபிஎல் போட்டியைத் திட்டமிட்டவாறு ஏப்ரல் – மே மாதங்களில் இந்தியாவில் நடத்த முடியவில்லை. கடந்த ஆண்டுக்கான 13ஆவது ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை நடந்தது.
இந்த 14ஆவது ஐபிஎல் போட்டி இந்தியாவில்தான் நடத்தப்படும் என்று கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்தது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி இந்தப் போட்டி தொடங்கியது.
கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் ஆறு நகரங்களில் மட்டுமே இந்தப் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டு சென்னை, மும்பையில் போட்டிகள் முடிந்தன. டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தபோது வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அடுத்த கட்டமாக கொல்கத்தா, பெங்களூரில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே ஐந்து வீரர்கள் போட்டியில் பாதியில் இருந்து விலகினார்கள். இதேபோல இந்தியாவைச் சேர்ந்த நிதின் மேனன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பால் ரீபெல் ஆகிய இரண்டு நடுவர்களும் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினார்கள்.
இதற்கிடையே ஐபிஎல் போட்டியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா), விருத்திமான் சஹா (ஹைதராபாத்), அமித் மிஸ்ரா (டெல்லி) ஆகிய நான்கு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் அணியின் பஸ் கிளீனர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதவேண்டிய ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கிரிக்கெட் வாரியமும், ஐபிஎல் ஆட்சி மன்றக்குழுவும் முடிவு செய்து ஐபிஎல் போட்டியைக் காலவரையின்றி ஒத்திவைத்தது.
வீரர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என்று கருதி கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்தது. வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உறுதி அளித்தார்.
இப்படி ஐபிஎல் போட்டியை பாதியிலேயே ஒத்திவைத்ததால், கிரிக்கெட் வாரியத்துக்கு 2,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெற இருந்தது. இதுவரை 29 போட்டிகள் நடந்துள்ளன. நேரடி ஒளிபரப்புக்கு, போட்டி ஒன்றுக்கு ரூ.54.4 கோடியை ஸ்டார் நிறுவனம் கொடுக்கிறது.
தற்போது பாதியில் ரத்து செய்யப்பட்டதால் 31 ஆட்டங்களுக்கான பணத்தில் ரூ.1,700 கோடி இழப்பு ஏற்படுகிறது. இது தவிர டைட்டில் ஸ்பான்சர் மற்றும் இதர ஸ்பான்சர்கள் மூலமும் கிரிக்கெட் வாரியம் வருவாயை இழக்கிறது. மொத்தத்தில் ரூ.2,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே பாதியில் ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களை செப்டம்பர் மாதத்தில் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, “டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அப்போது கொரோனா கட்டுக்குள் வந்துவிடும். வெளிநாட்டு வீரர்கள் வருவதிலும் பிரச்சினை இருக்காது” என்கிறார்.
டி20 உலகக் கோப்பை போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டதால், உலகக் கோப்பை நடைபெறுவதும் சந்தேகமே.
மேலும், நவம்பர் மாதம் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுவதற்கான வாய்ப்பும் குறைவே.
**-ராஜ்**
.�,