டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி 28ஆம் தேதி வரை கெடு விதித்துள்ளது.
ஏழாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கம் காரணமாக இந்தப் போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தப் போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தீவிரம் காட்டி வருகிறது.
இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டம் காணொலி வாயிலாக நடந்தது. இதில் பிசிசிஐ சார்பில் அதன் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை போட்டி, வருங்காலப் போட்டி அட்டவணை, அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், டி20 உலகக் கோப்பை போட்டியை கொரோனா அச்சத்துக்கு மத்தியில் இந்தியாவில் நடத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்க வசதியாக ஒரு மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஐசிசி ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
இதன்படி டி20 உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்தலாமா அல்லது மாற்று நடவடிக்கை மேற்கொள்ளலாமா என்பது குறித்து தீர்மானிக்க வருகிற 28ஆம் தேதி வரை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதற்குள் பிசிசிஐ தெரிவிக்கும் திட்டத்தின்படி டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து ஐசிசி தனது இறுதி முடிவை எடுத்து அறிவிக்கும்.
டி20 உலகக் கோப்பை போட்டியை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவது என்றும், 2024, 2026, 2028, 2030 ஆகிய ஆண்டுகளில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அணிகளின் எண்ணிக்கையை 16இல் இருந்து 20 ஆக உயர்த்துவது என்றும், இதே போல் 2027ஆம் ஆண்டு நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை 10இல் இருந்து 14 ஆக உயர்த்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
2024ஆம் ஆண்டில் இருந்து 2031ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்குள் டாப்-8 அணிகள் மட்டும் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பை போட்டியை இரண்டு முறையும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றை நான்கு முறையும் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
**-ராஜ்**
.�,