�
பொதுவாக வேற்றுமொழியில் தயாரிக்கப்பட்ட படங்களை தமிழில் ரீமேக் செய்யும்போது தமிழக சூழலுக்கு ஏற்ப திரைக்கதையில் மாற்றங்களும், படத்தின் பெயரும் இருக்கும். ஆனால் அப்படி எந்த ஒரு மாற்றங்களும் செய்யப்படாமல் படத்தின் விளம்பர வடிவம், பெயர் அனைத்தும் மலையாளத்தில் என்ன பெயர் வைக்கப்பட்டு வெளியானதோ அதனையே தமிழில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தி கிரேட் இந்தியன்’ கிச்சன் படத்திற்கும் வைத்துள்ளனர்.
புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதைச் சொல்லியிருந்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம், 2021ஜனவரி 15ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மலையாளத்தில் வெளியான அப்படத்தை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் நடிக்க கண்ணன் இயக்கத்தில் ரீமேக் செய்திருக்கிறார்கள். 2022 புத்தாண்டை முன்னிட்டு படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார்கள். தமிழுக்காக படத்தின் பெயரில் எந்த மாற்றமும் செய்யாமல் மலையாளத்தில் இருந்த அந்த பெயர் போஸ்டரில் இடம் பெற்றிருந்தது. ஆனால், ‘The’ என்ற ஆங்கில எழுத்து தமிழில் ‘தீ’ என இடம் பெற்றிருந்தது. அது எழுத்துப் பிழையுடன் வெளியான போஸ்டர் என்பது இன்று தெரிய வந்துள்ளது.
படத்தின் இரண்டாவது போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார்கள். அதில் ‘The’ என்பதற்கான தமிழாக்கம் ‘தி’ என தவறு சரி செய்யப்பட்டுள்ளது.
**-இராமானுஜம்**
�,”