1000ஆவது ஒருநாள் போட்டி: இன்று வெஸ்ட் இண்டீஸுடன் மோதும் இந்தியா!

Published On:

| By admin

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று (பிப்ரவரி 6) பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணி புதிய வரலாற்றை படைக்கிறது. 1000ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற சாதனையை புரிய உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இன்று நடைபெறும் ஒருநாள் ஆட்டத்தில் 1000ஆவது போட்டியில் விளையாட உள்ள முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா அந்த நிலையை அடையும்.
ஆயிரமாவது ஒருநாள் போட்டிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்கும் பெருமையை ரோஹித் சர்மா பெறுகிறார். முதல் போட்டிக்கு அஜீத் வடேகரும், 100ஆவது போட்டிக்கு கபில்தேவும், 200ஆவது மற்றும் 400ஆவது போட்டிக்கு அசாருதீனும், 300ஆவது போட்டிக்கு தெண்டுல்கரும், 500ஆவது போட்டிக்கு கங்குலியும், 600ஆவது போட்டிக்கு ஷேவாக்கும், 700, 800, மற்றும் 900ஆவது போட்டிகளுக்கு டோனியும் கேப்டனாக இருந்துள்ளனர்.
இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் இரண்டு உலக கோப்பையை வென்றுள்ளது. 1983இல் கபில்தேவ் தலைமையிலான அணியும், 2011இல் டோனி தலைமையிலான அணியும் உலக கோப்பையை வென்று கொடுத்தன.
ரோஹித் முழு நேர கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு விளையாட உள்ள முதல் ஒருநாள் தொடர் இதுவாகும். இன்றைய ஆட்டம் பகல் – இரவாக நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது
இந்திய அணி 1000ஆவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது குறித்து தெண்டுல்கர் தன் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்… “இந்திய அணி இன்று 1000ஆவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இதில் விளையாடும் முதல் அணியாக இந்தியா இருப்பது அற்புதமான தருணமாக நான் நினைக்கிறேன். முன்னாள் வீரர்கள், இன்னாள் வீரர்கள், நிர்வாகிகள் என எல்லோரும் இதற்கு காரணமாக இருந்தனர். ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டும் இதற்கு பங்களிப்பாக இருந்தன.
2011இல் உலகக் கோப்பையை கையில் ஏந்தியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்ததாகும். 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது என் வாழ்க்கையில் திருப்புமுனையாகும். இந்தப் போட்டியை பார்த்ததும்தான் எனக்கு கிரிக்கெட் மீதான உத்வேகம் ஏற்பட்டது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி சிறந்ததாகும். 1000ஆவது போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொடரை கைப்பற்ற வீரர்களை வாழ்த்துகிறேன்” என்று தெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இன்று முதல் தொடங்கும் ஒருநாள் போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இளம் வீரர் இஷான் கிசன் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார். துணை கேப்டன் கே.எல்.ராகுல் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 1000ஆவது போட்டி என்பதால் இந்திய அணி விளையாடும் ஆட்டத்துக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும், இந்திய அணியின் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள ராகுல் டிராவிட் மற்றும் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோஹித் சர்மா ஆகியோரின் புதிய கூட்டணியில் தொடங்கவிருக்கும் முதல் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share