�நான்காவது டெஸ்ட்: முதல் நாளிலேயே இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா!

Published On:

| By Balaji

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்தநிலையில் முதல் நாளிலேயே இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது இந்தியா அணி.

இந்தியா – இ்ங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் இன்று (மார்ச் 4) காலை தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து இந்திய அணி முதலில் பந்து வீச தொடங்கியது. இந்திய அணியில் பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் இடம்பெற்றிருந்தார். இங்கிலாந்து அணியில் பிராட், ஆர்ச்சருக்குப் பதிலாக லாரன்ஸ், பெஸ் இடம்பெற்றிருந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் முதல் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் 28 ரன்களும், சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய போப் 29 ரன்களும், பென் போக்ஸ் 1 ரன்னும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரன்ஸ் 46 ரன்களும், டோம்னிக் பெஸ் 3 ரன்னும், லீச் 7 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இங்கிலாந்து அணி 75.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அக்‌ஷர் படேல் நான்கு விக்கெட்டுகளும், அஷ்வின் மூன்று விக்கெட்டுகளும், முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில் முதல் நாளிலேயே இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது இந்திய அணி. இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆண்டர்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 8 ரன்களுடனும், புஜாரா 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

**-ராஜ்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share