புதிய பாதை தொடங்கி கடைசியாக நடித்து வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 படம் வரை பார்த்திபன் தன்னை மற்றவர்களிடம் இருந்து தனித்து அடையாளப்படுத்திக் கொள்வதற்கு, வித்தியாசமாக ஏதாவது ஒன்றை செய்வது வழக்கம். பட வாய்ப்புகள் இன்றி இருந்த இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன் 2019இல் இயக்கி நடித்த படம் ஒத்த செருப்பு. படம் நெடுகிலும் ஒற்றை கதாபாத்திரம் மட்டும் நடித்த இந்தப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்திய அரசின் தேசிய விருது கிடைத்தது. விமர்சகர்களின் பாராட்டும் குவிந்தது. இரவின் நிழல் எனும் பெயரில் ஒரே ஷாட்டில் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதற்கிடையில் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை இந்தியில் அபிஷேக் பச்சனை நடிக்க வைத்து தயாரித்திருக்கும் படத்துக்கு, இளையராஜா இசையமைப்பதாக தெரிவித்துள்ளார் பார்த்திபன்.
ஹவுஸ் புல் படம் 1999ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை பார்த்திபன் நடித்து இயக்கி இருந்தார். அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். அதன் பின்னர் பார்த்திபனும், இளையராஜாவும் இணைந்து பணியாற்றவில்லை. இருபத்தி மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் பார்த்திபன் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் படத்துக்கு இளையராஜா இசையமைக்கும் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
அதன் உடன், ‛‛இந்தியின் பின்னணி இசைக்கோர்ப்பில், மறுபுறம் ஏ.ஆர்.ஆரின் இரவின் நிழல். இசைபட வாழ்தல் அர்த்தப்பட. புகழ் பெற்று பொருள் ஈட்டாமல் இன்னும் பெற உழைப்பின் பெருமை காண்கிறேன். ஆஸ்கர் நாமினேஷன்ஸ் அறிவித்தபோது உச்சரிக்கப்பட்ட பெயர்களின் உச்சபட்ச உற்சாகம் ரூபாய், டாலர், பவுண்ட்டில் அடங்காது” என்று பதிவிட்டிருக்கிறார் பார்த்திபன்.
**அம்பலவாணன்**