டெல்லியில் நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீனை தோற்கடித்த மேரி கோம், ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிக்குத் தகுதி பெற்றார்.
2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் குத்துச்சண்டைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவில் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கின்றன. அதில் இந்தியாவின் சார்பில் பெண்கள் குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்கும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான தகுதிப் போட்டியின் இறுதிப் போட்டி டெல்லியில் இன்று(28.12.19) நடைபெற்றது.
ஒலிம்பிக் போட்டிக்கான தேதிகள் அறிவித்தபோது, இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் விளையாட மேரி கோம் பெயர் முன்மொழியப்பட்டது. ஆனால், தகுதிச் சுற்றுகள் நடத்தப்படாமல் நேரடியாக வீரர்கள்/வீராங்கனைகளை தேர்வு செய்வது தவறென்று பலரும் நினைத்ததால் இறுதிப்போட்டி வரை நடத்தப்பட்டது. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 6 முறை தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், 51 கிலோ எடைப் பிரிவில் ரிது கிரிவாலை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறினார். மறுபுறம், நிகாத் ஜரீனும் பைனலுக்குள் நுழைந்தார். ஆனால், இறுதிப் போட்டியை நடத்தாமல், ‘ஏற்கனவே பல சர்வதேச போட்டிகளில் மேரி கோம் பங்கேற்று விளையாடியதன் அடிப்படையில் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு மேரி கோமை அனுப்புவதாக குத்துச்சண்டை சம்மேளனம் முடிவுசெய்தது. சம்மளேனத்தின் இந்த முடிவு நிகாத் ஜரீனுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இதைத்தொடர்ந்து நிகாத் ஜரீன், “எனக்கு வேண்டியது நியாயமான வாய்ப்பு. நான் எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை. மேரி கோம் அல்லது எந்த வீராங்கனையாக இருந்தாலும் சரி, போட்டியை வைக்க வேண்டும். அனைத்துப் போட்டியாளர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கும், இந்திய குத்துச்சண்டை சங்கத்துக்கும் கோரிக்கை வைத்தார்.
இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து மேரி கோமுக்கும், நிகாத் ஜரீனுக்குமான தகுதிச்சுற்று இறுதிப்போட்டி இன்று(டிசம்பர் 28) டெல்லியில் நடைபெற்றது. போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அனுபவம் நிறைந்த மேரி கோம் ஆதிக்கம் செலுத்தினார். அவரது தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஜரீன் திணறினார். இறுதியில் 9-1 என்ற புள்ளிக் கணக்கில் மேரி கோம் வெற்றி பெற்று ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டார்.
போட்டி முடிந்த பின்னர் வெற்றிபெற்ற மேரி கோமுக்கு, தோல்வியடைந்த நிகாத் ஜரீன் கைகுலுக்க முயன்றார். ஆனால், ஜரீனின் கைகளை மறுத்துவிட்டுச் சென்றார் மேரி கோம். விளையாட்டைப் பொறுத்தவரையில், வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் சக போட்டியாளர்களை மதிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் இருக்கும் சிறப்பான குணமாகக் கருதப்படுகிறது. ஆனால், ஜரீனுடன் கைகுலுக்க மறுத்த மேரி கோமின் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் பரவின. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மேரி கோம், “நான் ஏன் அவருடன் கைகுலுக்க வேண்டும்? அவரை ஒருவர் மதிக்க வேண்டும் என்றால், முதலில் அவர் மற்றவர்களை மதிக்க வேண்டும். இதுபோன்ற குணம் கொண்டவர்களை நான் விரும்புவதில்லை. உங்களின் கருத்துகளை நீங்கள் களத்தில் வந்து நிரூபிக்க வேண்டும். களத்துக்கு வெளியே இருந்து கருத்து சொல்லத் தேவையில்லை” என்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிகாத் ஜரீன் “மூத்தவர்கள் இளையவர்களை மதிக்க வேண்டும். போட்டி முடிந்த பின்னர் அவருடன் கைகுலுக்கச் சென்றபோது, அவர் அவ்வாறு நடந்துகொண்டது எனக்கு வேதனை அளித்தது” என்றார். மேரி கோமின் இந்த செயலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.�,