இயக்குநர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவத்தை நடிகர் மகேஷ் பாபு தற்போது பகிர்ந்திருக்கிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகர்களில் மகேஷ் பாபுவும் ஒருவர். இவர் சமீபத்தில் ஓடிடியில் ஒளிபரப்பாகும் டாக் ஷோ ஒன்றில் பங்கேற்று இருந்தார். அதில் பேசிக் கொண்டிருந்தபோது முன்பு இயக்குநர் மெகர் ரமேஷூடன் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் மகேஷ் பாபு.
சென்னையில் ஒருமுறை மகேஷ் பாபு, அவரது குடும்பம் மற்றும் மெகர் ரமேஷ், அவரது குடும்பம் இணைந்து உணவருந்த உணவகத்திற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த இரண்டு பெண்கள் மகேஷ்பாபுவிடம் வந்து, தங்களின் தீவிர ரசிகை என அறிமுகப்படுத்திக் கொண்டு, ஆட்டோகிராஃப் கேட்டுள்ளனர்.
ஆனால், மகேஷ் பாபு ‘இது என் குடும்ப நேரம். இப்போது இதுபோல எதுவும் வேண்டாம்’ என மறுத்து இருக்கிறார். அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்ற பிறகு இயக்குநர் மெகர், மகேஷ் பாபுவிடம் அந்த பெண்கள் இயக்குநர் ஷங்கரின் மகள்கள் என சொல்லி இருக்கிறார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மகேஷ் பாபு, அந்த ஹோட்டலின் வேறு பக்கம் இருந்த இயக்குநர் ஷங்கரிடம் சென்று, ‘உங்கள் மகள்கள் என தெரியாது. அதுவும் இல்லாமல் நான் என் குடும்பத்தோடு நேரம் செலவிட வந்ததால் ஆட்டோகிராஃப் போட மறுத்து விட்டேன். வேறெந்த காரணமும் இல்லை’ என இயக்குநர் ஷங்கரிடம் விளக்கி மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.
இயக்குநர் ஷங்கர் இதை கேட்டு, ‘ஒரு பிரச்சனையும் இல்லை. பிரபலங்களின் வாழ்க்கை முறை, அவர்கள் சூழல் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கும் நன்றாக தெரியும். அதனால் விடுங்கள் பார்த்து கொள்ளலாம்’ என மிகவும் பாசிட்டிவாக பேசி இருக்கிறார்.
இதனை இந்த நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்துள்ள நடிகர் மகேஷ் பாபு, ஷங்கரின் இந்த பேச்சும் அவரது எளிமையும் என்னை மிகவும் கவர்ந்த விஷயமாக அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருக்கிறார்.
**ஆதிரா**