நடிகை நயன்தாராவை போன்று இளம் மாடல் ஒருவரை மேக்-அப்பால் மாற்றியமைக்கும் வீடியோ வெளியாகி ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.
கடந்த ஜூலை 5ஆம் தேதி மின்னம்பலத்தில் [நயன்தாராவா? அவரது நகலா? ஆனந்தக் குழப்பம்!](https://minnambalam.com/entertainment/2020/07/05/39/latest-tamil-cinema-news-nayanthara-lookalike)என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதைப் பார்த்த பலரும் ‘மேக் அப்பால் ஒருவரது முகத்தில் சில மாற்றங்கள் கொண்டு வர இயலும்தான். ஆனால் ஆளையே மாற்றக்கூடிய அளவு மேக் அப்புக்கு சக்தி இருக்கிறதா?’என்று குழப்பமுடன் கேட்டனர். அதிலும், அந்த இளம்பெண்ணின் மேக் அப் இல்லாத முகத்தைப் பார்த்தவர்கள், ‘உண்மையைக் கூறுங்கள், இது மேக் அப்பா? அல்லது அவர் பிளாஸ்டிக் சர்ஜரி ஏதேனும் செய்து கொண்டிருக்கிறாரா?’ எனவும் சந்தேகத்துடன் கேட்டனர்.
இந்த கேள்விகள், குழப்பங்கள் அனைத்தும் ஒப்பனைக் கலைஞர் கண்ணன் ராஜ மாணிக்கத்தின் அசாத்திய திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம்தான். ஒரு சிலையை செதுக்கும் சிரத்தையுடன் அவர் தன் வேலையை செய்கிறார். இது மேஜிக் அல்ல மேக் அப் தான் என்பதை உணர்த்தும் விதமாக அவர் விஷாஸ்ரீ என்னும் மாடலை நயன்தாராவாக மாற்றும் மேக் அப் வீடியோ indiaglitz சேனலில் தற்போது வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சிலர் நயன்தாரா போன்று ஒப்பனை செய்து தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமாகி இருந்தாலும், இந்த அளவிற்கு யாரும் அவருடன் ஒத்துப் போகவில்லை என்பது தான் உண்மை. அதிலும் நயன்தாராவின் முக அமைப்பு சற்றும் இல்லாத ஒருவருக்கு இந்த மாற்றம் கொண்டு வந்தது தான் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையம் தந்த இந்த புது நயன்தாராவுக்கு விரைவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கட்டும் என்று பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் ஒப்பனைக் கலைஞர் கண்ணன் ராஜ மாணிக்கத்தின் திறமையைப் பாராட்டியும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”