விளையாட்டு உலகின் உயரிய விருதான லாரஸ் விருது, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு நேற்று வழங்கப்பட்டது.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியை, கிரிக்கெட் ரசிகர்கள் அல்லாதவர்கள் கூட மறந்திருக்க மாட்டார்கள். 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கபில்தேவ் தலைமையிலான அணி வென்ற நிலையில், 28 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியின் கைகளில் உலகக் கோப்பை 2011ல் கிடைத்தது. அதிலும் அந்த உலகக் கோப்பையின் மிக முக்கியமான மற்றொரு சிறப்பு, அது இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் , உலகெங்கும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்த சச்சின் டெண்டுல்கரின் கடைசி உலகக் கோப்பையாகும். சச்சினுக்காக உலகக் கோப்பையை வெல்வோம் எனச் சபதமிட்டே இந்திய அணி கோப்பையை வென்றது.
இந்திய அணி வென்றதுமே, மைதானத்துக்குள் இறங்கிய அணியின் அனைத்து வீரர்களும் சச்சின் டெண்டுல்கரை தனது தோள்களில் ஏந்தி மைதானத்தை வலம் வந்தனர். பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்த அந்த நிகழ்வு தான், கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டில் சிறந்த தருணமாக உள்ளது. 2000 -2020க்கான லாரஸ் விளையாட்டு தருணத்துக்கான விருதினை அதிகமான வாக்குகளை பெற்று சச்சின் டெண்டுல்கர் நேற்று (பிப்ரவரி 17) வென்றுள்ளார்.
விருதினை வென்ற சச்சின் டெண்டுல்கர் பேசும்போது, உலகக்கோப்பையை வென்ற தருணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது எனவும், இந்தியா முழுவதும் இணைந்து கொண்டாடப்பட்ட அற்புத தருணம் எனவும் நெகிழ்ந்து கூறினார்.
உலகக்கோப்பையை வென்றது எவ்வளவு முக்கியமானது என்ற கேள்விக்கு, தான் 10 வயதில் இருக்கும்போது 1983ல் இந்திய அணி உலகக்கோப்பை வென்ற போது அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை என்றாலும் தானும் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டதாகக் கூறினார் சச்சின் டெண்டுல்கர். அந்த மகிழ்ச்சியைத் தானும் ஒருநாள் அடைய விரும்பி தனது பயணத்தை தொடங்கியதாகவும் பதிலளித்தார்.
“அதை நான் அடைய 22 ஆண்டுகள் ஆனது, ஆனால் ஒருபோதும் நான் நம்பிக்கையை கைவிடவில்லை, என் நாட்டு மக்கள் சார்பாகக் கோப்பையை ஏந்தினேன்” என கூறினார்.
சவுத் ஆப்பிரிக்காவின் தலைவர் நெல்சன் மண்டேலாவைத் தான் 19 வயதில் சந்தித்ததையும், அவரின் கருத்துகள் தன்னை எவ்வாறு கவர்ந்தது எனக் கூறிய சச்சின், அவர் கூறிய கருத்துக்களில் மிகவும் முக்கியமானதாக ’விளையாட்டுக்கு அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி உண்டு’ எனக் கூறியுள்ளதை மேடையில் நினைவு கூர்ந்தார்.
இந்த விருது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் விருதை இந்திய அணியினர், ரசிகர்கள், இந்திய கிரிக்கெட் அணியின் நலம் விரும்பிகள் என அனைவருக்கும் சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டார்.
**பவித்ரா குமரேசன்**
�,