tஊரடங்கு சினிமாவுக்கு செய்த நன்மை: மிஷ்கின்

Published On:

| By Balaji

சினிமா மீண்டும் துடிப்போடு இயங்கும் என்றும் திரைப்பட இயக்குநர்களிடமிருந்து மிகவும் சுவாரஸ்யமான உள்ளடக்கம் இனி அதிகம் வரும் என்றும் இயக்குநர் மிஷ்கின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் சினிமாத்துறையின் பரபரப்பான வேகம் தற்காலிகமாக நின்றுவிட்டது. அடுத்து எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பதே இன்னும் தெரியாமல் உள்ள நிலையில், படப்பிடிப்பை பாதியில் நிறுத்தியுள்ள இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதே சமயம் பல இயக்குநர்கள் இக்காலத்தை தங்களது திரைக்கதை பணிகளுக்காகவும், புத்தக வாசிப்புக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் இயக்குநர் மிஷ்கின் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய ஊரடங்கு அனுபவம் குறித்தும், தான் எழுதியுள்ள திரைக்கதைகள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

மிஷ்கின் பேசியதாவது, “உலகம் அதிர்ச்சி நிலையில் உள்ளது. ஆனால் எதுவும் நம் வாழ்க்கையை நிறுத்தாது. நாம் தொடர்ந்து பணியாற்றுவோம், பொழுதுபோக்கு நடவடிக்கைகளை அனுபவிப்போம், சினிமா அதன் ஒரு பகுதியாக இருக்கும்.

கதைகள் நம்மை பிரதிபலிக்கின்றன. மொழியின் முழுமையே கதைகள் தான். இயக்குநர்கள் இக்காலங்களில் அதிகம் கற்றுக்கொண்டிருப்பார்கள். மேலும் அவர்களுக்கு சொல்வதற்கு இன்னும் சிறந்த கதைகள் இருக்கும். அவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு சாதாரண மனிதனிடமும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது. உதாரணமாக, குழந்தைகள் இந்த நேரத்தை தங்களை வீடுகளில் அடைத்து வைத்திருந்த ஒரு கட்டமாக நினைவில் கொள்வார்கள். அதே சமயம், தாங்கள் உண்பதற்காக வீட்டிலுள்ள ஒருவர் பாதுகாப்பையும் கடந்து வெளியே சென்று வருவதை என்றுமே மறக்கமாட்டார்கள். இது தான் அவர்களுக்கு மனித நேயம் என்றால் என்னவென்று தானே உணரும் நேரமாக இருக்கும். இந்த வாழ்க்கை அனுபவங்கள் தான் சிறந்த கதைகளாக உருவாகும்.

இந்த இரு மாதங்களில் மட்டும் 11 திரைக்கதைகளை உருவாக்கியுள்ளேன். நான் இப்போது நிறைய வாசிக்கிறேன். ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வாசிக்கிறேன். பல்வேறு தலைப்புகளில், சித்தாந்தம், வரலாறு, தத்துவம் என்று வாசிக்கிறேன். கூடவே பியானோவும் கற்று வருகிறேன்” எனக் கூறியுள்ளார் மிஷ்கின்.

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel