�3ஆவது டெஸ்ட் – 2ஆவது நாள்: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

Published On:

| By Balaji

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 24) தொடங்கியது.

உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த பிங்க் பால் டெஸ்டில், டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், இரவு உணவு இடைவேளைக்கு முன்பாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 48.4 ஓவர்களில் 112 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 57 ரன்களுடனும் ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து நேற்று (பிப்ரவரி 25) இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. எனினும், ரோகித் 66 மற்றும் கில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கோலி 27 ரன்களுக்கு போல்டாகி வெளியேறினார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அஸ்வின் 17 ரன்களில் வெளியேறினார். இஷாந்த் சர்மா 10 ரன்களுடன் ஆட்டமிழக்கவில்லை. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 53.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. இதனால், இந்திய அணி 33 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. அந்த அணியில் கேப்டன் ரூட் 19, ஸ்டோக்ஸ் 25, போப் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், இங்கிலாந்து அணி 30.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. இரவு உணவு இடைவேளை வரை இந்தியாவின் ரோகித் 6, கில் 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பின்னர் விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 25, சுப்மன் கில் 15, ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தனர். இந்தியா 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்தது.

இதனால், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அக்சர் படேல் ஐந்து விக்கெட்டுகளையும், அஷ்வின் நான்கு விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட் எடுத்தனர். இதனால் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

நான்காவது டெஸ்ட் போட்டி இதே நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகல் நேர ஆட்டமாக மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share