எங்கள் ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் வைரமுத்துதான்: பாரதிராஜா

Published On:

| By Balaji

தமிழ் சினிமா கண்டெடுத்த ஒப்பற்ற கலைஞர் எனவும், கவிப்பேரரசு என்றும் போற்றிப் புகழப்படும் கவிஞர் வைரமுத்துவுக்கு இன்று(ஜூலை 13) 66 ஆவது பிறந்தநாள்.

ஐம்பது ஆண்டு காலமாக, தமிழ் சினிமாவில் 7500க்கும் அதிகமான பாடல்களை இயற்றி உணர்வு கடத்தி உயிர் ஊட்டியவர் கவிஞர் வைரமுத்து. தனது பாடல் வரிகளின் வழியாக ஏராளமான திரைப்படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றவர். கவிஞர் வைரமுத்துவின் 66 ஆவது பிறந்த தினமான இன்று திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இன்று அகவை 66. அவரது கவித்தமிழுக்கு என்றும் வயது 16. தமிழ் அன்னைக்குக் கிடைத்த அணிகலன்களில் வைரமும் முத்தும் சேர்த்தவர், முத்தமிழறிஞர் கலைஞரின் அன்புக்கு பாத்திரமானவர்!

ஆயிரமாண்டு வாழும் படைப்புகளைப்
படைத்து நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்!

— M.K.Stalin (@mkstalin) July 13, 2020

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த வாழ்த்துச் செய்தியில், **“கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இன்று அகவை 66. அவரது கவித்தமிழுக்கு என்றும் வயது 16. தமிழ் அன்னைக்குக் கிடைத்த அணிகலன்களில் வைரமும் முத்தும் சேர்த்தவர், முத்தமிழறிஞர் கலைஞரின் அன்புக்கு பாத்திரமானவர்! ஆயிரமாண்டு வாழும் படைப்புகளைப் படைத்து நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்!”** என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று இயக்குநர் பாரதிராஜா, ‘என் மண்ணின் மைந்தன் கவிப்பேரரசு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டு வீடியோ பதிவை வெளியிட்டு தனது வாழ்த்துக்களைக் கூறியுள்ளார்.

அதில், “இன்றைய தினம் ஜூலை 13, தமிழ் மண் பூரித்து பொங்கி எழ வேண்டிய நாள், பூப்பெய்திய நாள், இலக்கிய உலகம் பூத்த நாள். கவிப்பேரரசு வைரமுத்துவின் 66 வது பிறந்த நாள். சொல்வதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மண் பூப்பெய்த நாளென்று சொன்னேன். இலக்கிய உலகம் பூரித்து எழ வேண்டிய நாள். திரைப்பட உலகமும் சரி, இலக்கிய உலகமும் சரி ஒரு கவிஞனை இப்படி கண்டெடுத்திருக்க முடியாது. அதிலும் எங்கள் மதுரை மண், மிகப்பெரிய பெருமைக்குரியது. இன்று வைகை வறண்டு கிடக்கிறது.

**நான் உன்னில் இருப்பேன், நீ என்னில் இருப்பாய்**

ஆனால், இவர் பெயரைச் சொன்னால், ஓர் ஊற்று கிளம்பி வரும். மேற்கு தொடர்ச்சி மலை சிலிர்த்துக் கொண்டிருக்கிறது. மேகங்கள் எல்லாம் பரந்து, அந்த மலையை பொன்னாடை போர்த்திக் கொண்டிருக்கிறது. அத்தகைய ஒரு நாள். பொதுவாகவே திரைத்துறையில் கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள்.மிகப்பெரிய கவிஞர் கண்ணதாசன் இருந்திருக்கிறார். அதன்பிறகு தமிழ் திரையுலகக்கு, இலக்கிய உலகுக்கு பெரிய இடைவெளி வந்துவிடுமோ என்று பயந்த நேரத்தில் பிறந்தவர்தான் கவிப்பேரரசு வைரமுத்து. இந்த கொரோனாவால் நேரடியாக சென்று ஒரு சால்வை போர்த்தி சடங்காக ஒரு நன்றி சொல்ல முடியவில்லை. அதற்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம், இந்த கொரோனா பிரித்து வைத்திருந்தாலும் நான் உன்னில் இருப்பேன், நீ என்னில் இருப்பாய் என்பது உலகறியும்.

நான் சொல்லிக்கொண்டிருப்பேன். இந்த கொரோனா யாரை வேண்டுமானாலும் பாதிக்கும். உன்னை மட்டும் பாதிக்காது. ஏனென்றால் வைத்தியம் தெரிந்தவன். எதை எவ்வளவு அளவோடு சாப்பிட வேண்டும். எதை எதை கலந்து சாப்பிட வேண்டும், உடல் ஆரோக்கியத்துக்கு என்ன வேண்டும் என்பதை அற்புதமாக அறிந்து வைத்திருப்பவன். ஒரு கருவாட்டுக் குழம்பை வைக்கிறோம், அதை அற்புதமாக எப்படி வைப்பது என்பதையும் சொல்வான்.

**விஞ்ஞான கவிஞனும், மண் சார்ந்த கவிஞனும்**

வயிற்றுப்போக்காக இருக்கிறதே, அதற்குச் சொல்வான் வைத்தியம். மனநிலை சஞ்சலமாக இருக்கிறதே, அதற்கும் மருந்து சொல்வான். உலகிலேயே விஞ்ஞான கவிஞனாகவும் இருக்கிறான், மண் சார்ந்த கவிஞனாகவும் இருக்கிறான். அங்குதான் ஆச்சரியப்பட வேண்டும். ஒரு புத்தகம் எழுதினாலும் சரி, கவிதை எழுதினாலும் சரி, ஒவ்வொரு வரியிலும் உயிர் இருக்கும். ஐநூறு பக்கங்களைக் கொண்ட புத்தகங்களை புரட்டினால், முதல் நான்கு பக்கங்கள் பிரமாதமாக இருக்கும். ஐந்தாவது பக்கம் போகும் போது சாதாரணமாகி விடும்.

ஆனால், பக்கத்துக்குப் பக்கம் வரிக்கு வரி, இதோ வைரமுத்து இருக்கிறேன் என்று அந்த வரிகள் பேசிக்கொண்டிருக்கும். அத்தகைய சிறப்புக்குரிய மிகப்பெரிய கவிஞன். அவனோடு இணைந்து நான் பணியாற்றிய காலங்கள் அற்புதம். படப்பிடிப்பு இருக்கும்போதுகூட நாங்கள் வாழ்ந்து மூழ்கியதில்லை. இந்த கொரோனா காலத்தில் உட்கார்ந்து பார்க்கிறேன். புரிந்து செய்தாயோ, புரியாமல் செய்தாயோ, அற்புதமான வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறாய். உலகத் தமிழர்கள் அனைவரும் உன்னை வாழ்த்துகிறார்கள். தமிழகம் உன்னைத் தவமாக பெற்றிருக்கிறது. ஷேக்ஸ்பியரையும் ஷெல்லியையும் சொல்வார்கள். எங்கள் நாட்டின் ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் கவிப்பேரரசு வைரமுத்துதான்.

வாழ்க, நீடுழி வாழ்க. இன்னும் சிறந்த படைப்புகளை உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மதுரை பெற்ற செல்வம். தெரிந்து பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. பிறக்கும்போதே வைரமுத்து. நீ பட்டை தீட்டிய வைரம். கிடைப்பதற்கு அரிய முத்து. ” என்று கூறி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது பிறந்தநாள் குறித்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார். கொரோனா காலகட்டத்தில் நாம் இருப்பதைக் குறிப்பிட்டு எழுதிய அந்தக் கவிதையை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

*ஜூலை 13 *

*பிறந்தநாள்*

*நீங்கள்*

*நின்ற இடம் நின்று*

*நினைத்தாலே போதும்;*

*உள்ளத்துப் பேரன்பை*

*உள்ளுணர்வு உற்றறியும்.*

*ஏழைகளுக்கு*

*முகக் கவசம் வழங்குங்கள்.*

*எங்கே போய்விடும் காலம்?*

*அடுத்த ஆண்டு*

*உங்கள் உள்ளங்கை தொட்டு*

*வாழ்த்துக்கள் வாங்குவேன்.*

*வாழ்க வையகம் *

*வாழ்க உயிர்க்குலம்*

*வெல்க மானுடம்.*

என்று அந்த கவிதையின் வரிகள் அமைந்துள்ளன.

மேலும் தனது 50 ஆண்டு கால இலக்கிய வாழ்க்கையைப் பற்றி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், **“என் ஐம்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் எது எளிதெனில், எழுதுவது. எது கடிதெனில், வஞ்சகம் – சூழ்ச்சி, பொறாமை – பொய்ப்பழி, இவற்றைக் கடப்பது. கடந்தால் வாழ்வு செழுமையுறும்; மன்னிக்கும் போது தான் முழுமையுறும். முழுமையை நோக்கி”** என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share