uபணமோசடி வழக்கு: விஷால் வெளியிட்ட அறிவிப்பு!

Published On:

| By Balaji

நடிகர் விஷாலின், தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த கணக்காளர் ரம்யா பண மோசடியில் ஈடுபட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தரப்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடிகர் விஷால் 2013ஆம் ஆண்டு ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். இந்த நிறுவனம் மூலம் தான் நடித்த ‘பாண்டிய நாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘பூஜை’, ‘ஆம்பள’, ‘துப்பறிவாளன்’ என பல படங்களை அவர் தயாரித்துள்ளார். மேலும், விஷால் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘சக்ரா’ படத்தையும் இந்த நிறுவனத்தின் சார்பில் அவரே தயாரித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் அந்த நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன், அங்கு பணியாற்றி வந்த கணக்காளர் ரம்யா நிறுவன பணத்தை கையாடல் செய்து விட்டதாக காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், நிறுவனத்தின் சார்பில் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய டிடிஎஸ் தொகையை ரம்யா செலுத்தவில்லை எனவும், பணத்தைக் கையாடல் செய்து தனது கணக்கிலும், கணவர் மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளிலும் பரிமாற்றி மோசடி செய்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அலுவலக இ-மெயில் மற்றும் அலுவலக கணிப்பொறியில் உள்ள முக்கியமான ஃபைல்களை அவர் அழித்துவிட்டதுடன், தினசரி வரவு-செலவு கணக்குகளிலும் முறைகேடு செய்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விஷாலின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் “எங்கள் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்த திருமதி.ரம்யா என்பவர், நிறுவனத்தில் பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை முறைகேடாகப் பயன்படுத்தி ரூ.45 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பது கண்டறியப்பட்டு, 30-6-2020 அன்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7-7-2020 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

General Notice !! pic.twitter.com/M9yXRcDCxq

— Vishal Film Factory (@VffVishal) July 16, 2020

எனவே, ரம்யா இனி எங்கள் நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில்’ பணியாற்றவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம். ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனத்தின் கணக்குத் தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் மீறி தொடர்பு வைத்துக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share