பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணத்துக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பாலிவுட்டில் யாரும் அவருக்கு உதவி செய்யவில்லை என்று பிரபல ஸ்டைலிஸ்ட் சப்னா பாவ்னானி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையாக எடுக்கப்பட்ட ‘எம்.எஸ்.தோனி தி அன்டோல்டு ஸ்டோரி’ திரைப்படம் மூலமாக இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். 34 வயதே ஆன சுஷாந்த் நேற்று (ஜூன் 14) மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி முதற்கொண்டு அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலகினர் என ஏராளமானவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “திறமை மிக்க இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவு செய்தி மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. வெள்ளித் திரையில் அற்புதமான கதாபாத்திரங்களுக்கு அவர் உயிர் கொடுத்துள்ளார். பல இளைஞர்களுக்கு அவர் ஓர் அடையாளமாகவும் உதாரணமாகவும் இருந்துள்ளார். அவர் நம்மை விட்டு விரைவாகச் சென்றுவிட்டார். அவரது குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அவரது இழப்பைத் தாங்க இயலாத பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலரும் “சுஷாந்த் எங்களிடம் உதவி கேட்டு இருக்கலாமே, என்ன பிரச்சினை என்று எங்களிடம் கூறி இருக்கலாமே, இப்படி ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டாரே” என்று சமூக வலைதளங்களில் உருக்கமாகப் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் சுஷாந்தின் தற்கொலை குறித்து பிரபல ஸ்டைலிஸ்ட் சப்னா பாவனானி பாலிவுட் திரையுலகினரை சாடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சுஷாந்தின் தனிப்பட்ட ஸ்டைலிஸ்டாகவும் இருந்த சப்னா தனது ட்விட்டர் பதிவில் “கடந்த சில ஆண்டுகளாக சுஷாந்த் அனுபவித்த கஷ்டங்களில் எவ்வித ரகசியமும் இல்லை. சினிமாவில் இருக்கும் யாரும் அவருக்கு உறுதுணையாக நிற்கவும் இல்லை. அவருக்கு உதவி செய்ய கை கொடுக்கவும் இல்லை. சினிமாத்துறை உண்மையில் எவ்வளவு மேம்போக்காக இருக்கிறது என்பதற்கு இப்போது வரும் ட்வீட்களே சாட்சி. இங்கே யாரும் உங்களுக்கு நண்பன் இல்லை. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று கூறியுள்ளார்.
இந்தப் பதிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”