மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் சீனியர்(95) உடல் நலக்குறைவால் சண்டிகரில் இன்று காலை காலமானார்.
தேசத்தின் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான பல்பீர் சிங், நவீன ஒலிம்பிக் வரலாற்றில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 ஜாம்பவான்களுள் ஒரே இந்தியராவார். ஒலிம்பிக்கின் ஆண்கள் ஹாக்கி இறுதிப் போட்டியில் ஒரு நபர் அடித்த பெரும்பாலான கோல்களுக்கான இவரது உலக சாதனையை இன்னும் எவராலும் தொட முடியாமல் உள்ளது. 1952 ஒலிம்பிக் போட்டியின் தங்கப் பதக்க ஆட்டத்தில் ஹாலந்துக்கு எதிராக இந்தியா 6-1 என்ற கோல் கணக்கில் வென்றதில் பல்பீர் சிங்கின் பங்கு 5 கோல்கள் ஆகும். 1957 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற அவர் 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் உலகக் கோப்பை வென்ற அணியின் மேலாளராக இருந்தார்.
இந்நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிங் மொஹாலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்தார். மூச்சுக்குழாய் நிமோனியா காரணமாக பல உறுப்பு செயலிழப்புடன் அவர் மிகவும் தீவிரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அடுத்தடுத்து லேசான இருதய அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மே 12 முதல் வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில், இன்று காலை 6.17 மணிக்கு பல்பீர் சிங் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். இவர் தனது மகள் சுஷ்பீர் போமியா மற்றும் பேரன் கபீர் சிங் போமியா ஆகியோரின் பராமரிப்பில் சண்டிகரில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்துள்ளார். மேலும் அவருக்கு கன்வல்பீர் சிங், கரன்பீர் சிங் மற்றும் குர்பீர் சிங் என மூன்று மகன்கள் உள்ளனர்.
கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி கொரோனா தொற்றின் ஆரம்பகட்டத்தில் அனைவரின் பாதுகாப்பிற்காக தான் பிரார்த்தனை செய்வதாகக் கூறி தனது கடைசி செய்தியை அவரது டிவிட்டர் பக்கத்தில் விட்டுச் சென்றுள்ளார் இந்த சாதனை வீரர்.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,