தமிழக அரசியலும், உலகம் சுற்றும் வாலிபன் படமும் பிரித்து பார்க்க முடியாத ஒன்று திமுகவின் பொருளாளர், மற்றும் அடிப்படை பொறுப்பில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்ட பின்னர் எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் அவர் தயாரித்து, இயக்கி, இரு வேடங்களில் நாயகனாக நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.
1973ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் அக்காலத்தில் பல தடைகளைக் கடந்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்தப் படத்தை பல முறை ரீ-ரிலீஸ் செய்து வெளியிட்டும் ஒவ்வொரு முறையும் பல ஊர்களில் அந்த சமயத்தில் வெளியாகும் புதிய படங்களுக்குப் போட்டியாக ஓரிரு வாரங்கள் வரை ஓடி சரித்திரம் படைத்திருக்கிறது. வெளிநாடுகளில் படப்பிடிப்பு என்பதை யோசித்து கூட பார்க்க முடியாக காலகட்டத்தில் ஜப்பான், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என முழுக்க முழுக்க வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம் உலகம் சுற்றும் வாலிபன். அரசியல் படமாக இருக்கும் என அரசியல் வட்டாரமும், திரையுலகமும் எதிர்பார்த்த சூழலில் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக எம்.ஜி.ஆர் இயக்கிய படம் இது. தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், அக்கட்சி கொடி இடம்பெற்ற முதல் படம் உலகம் சுற்றும் வாலிபன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம்.
விஞ்ஞானியான முருகன், மின்னலை பிடித்து, அதனை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், ‘பார்முலா’வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். இதை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ, எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கிறார் என்பது தான், கதை.
முருகன், ராஜூ என இரண்டு கதாபாத்திரங்களையும் எம்.ஜி.ஆர்., ஏற்று நடித்திருப்பார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என, மூன்று கதாநாயகியர். நாடு, நாடாக பயணிக்கும் சர்வதேச கதை, அதை திறமையாக கையாண்டு இருப்பார், இயக்குனர் எம்.ஜி.ஆர்.
விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர், பாடல்களை எழுதினர். ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி, சிரித்து வாழ வேண்டும்’ உட்பட, அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன. இப்படம் தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் டால்பி அட்மாஸ் சவுண்டுடன் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, உலகம் முழுவதும் சரோஜா பிலிம்ஸ் வெளியிட, தமிழகம் முழுவதும் 7 ஜி பிலிம்ஸ் மற்றும் சரோஜா பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிடுகிறார்கள்.
எம் ஜி. ஆர்.அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்கும் படமாக எதிர்பார்க்கப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் உயிருடன் இல்லாத சூழ்நிலையில் அதிமுக எதிர்கொள்ளும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் இப்படத்தை 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடுகள் நடந்துவருகிறது. இப்படம் வெளியாகி 53 வருடங்களை கடந்து விட்டாலும் இன்றைக்கும் தலைமுறை கடந்து அனைத்து தரப்பினராலும் ரசித்து பார்க்ககூடிய படமாக உலகம் சுற்றும் வாலிபன் இருக்கிறது.
**-இராமானுஜம்**
�,”