இந்த மாதம் 17ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
உலக அளவில் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ்ஸில் இந்த மாதம் 17ம் தேதி தொடங்க இருக்கிறது. உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் கேன்ஸ் விழாவில் பங்கேற்கும். பிரான்ஸில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்க உள்ள இந்திய நடிகர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் உள்ள இந்திய குழுவை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வழிநடத்த இருக்கிறார். அதன்படி, இந்த குழுவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சேகர் கபூர், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், நவாசுதீன் சித்திக் ஆகியோரும் நடிகைகளில் நயன்தாரா, தமன்னா, பூஜா ஹெக்டே ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரைய்லர் மற்றும் விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை தழுவி நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள ‘ராக்கெட்டரி- தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் 19ம் தேதி திரையிடப்பட இருக்கிறது. இதனால் நடிகர் மாதவனுக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**