திரையுலகில் உயரிய விருதாக மதிக்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது,1996ம் ஆண்டு தமிழ்த் திரையுலகத்திலிருந்து நடிகர் சிவாஜி கணேசன், 2010ம் ஆண்டு தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 2019ஆம் ஆண்டுக்கான விருது தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்திற்கு இன்று(25.10.2021) காலை புது டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தாதா சாகேப் விருதை அவருக்கு வழங்கினார்.
45 ஆண்டுகள் அவரது சிறந்த பங்களிப்புக்காக ரஜினிகாந்தை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த், மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், மாப்பிள்ளை தனுஷ், பேரக்குழந்தைகள் ஆகியோருடன் கலந்து கொண்டார். ரஜினிக்கு விருது வழங்கும் முன்பாக அவரைப்பற்றிய காணொளி ஒளிபரப்பட்டது. ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க தொடங்கியது முதல் இன்றுவரை அவரது பல சாதனைகளை இந்த காணொளியில் வெளியிட்டனர்.
விருது பெற்று கொண்ட ரஜினிகாந்த் பேசுகையில், ‛ விருது வழங்கிய மத்திய அரசுக்கும், என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும் நன்றி. தாதா சாகேப் பால்கே விருதை எனது குருவான இயக்குனர் பாலச்சந்தர், அண்ணன் சத்யநாராயணராவ், நண்பர் ராஜ்பகதூர், என் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், பத்திரிக்கை ஊடக நண்பர்கள், என்னுடைய ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்பிக்கிறேன், எனத் தெரிவித்தார்.
**-அமபலவாணன்**�,