மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கியின் நாவலை மையமாக் கொண்டே இந்தப் படம் உருவாகிவருகிறது. மணிரத்னத்தின் கனவுத் திட்டமாக இப்படம் உருவாகிறது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
2019 டிசம்பரில் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து பகுதிகளில் துவங்கியது. அதன்பிறகு சில நாட்கள் பாண்டிச்சேரியிலும், சென்னையிலும் நடந்தது. கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நின்றுபோனது. அதற்குப் பிறகு, இலங்கையில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டனர், நடக்கவில்லை. இந்தியாவுக்குள் படப்பிடிப்பை நடத்தலாம் என நினைத்தார்கள், அதுவும் நடக்கவில்லை. ‘பொன்னர் சங்கர்’ மாதிரி தமிழகத்திலேயே முடித்துவிடலாம் என யோசித்தார்கள், அதுவும் நடக்கவில்லை. இறுதியாக, பாகுபலி படம் உருவான ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்புக்கு ஏற்பாடானது. அதன்படி, கடந்த ஜனவரி 6ஆம் தேதி முதல் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு துவங்கி நடந்துவருகிறது.
படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, பூங்குழலி கேரக்டரில் ஐஸ்வர்யா லட்சுமி, குந்தவையாக திரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு இரண்டு வேடங்கள். பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினி ரோலிலும், மந்தாகினி கேரக்டரிலும் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். தற்பொழுது த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் படத்தில் பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடிக்கிறார். ஆரம்பத்தில் சின்ன பழுவேட்டரையராக நடிக்க பார்த்திபனிடம் பேசியிருக்கிறது படக்குழு. பார்த்திபனும் அடுக்கடுக்காக பல படங்களை கைவசம் வைத்திருப்பதால், தேதி ஒதுக்குவதில் நேர்ந்த சிக்கலினால் நடிக்க முடியாமல் போனது. ஆனால், இந்திய அளவில் முக்கிய சினிமாவாக, பெருமை மிக்க இப்படத்தில் இல்லாமல் போய்விடக்கூடாது என்று யோசித்திருக்கிறார் பார்த்திபன். அதனால், பார்த்திபனே மணிரத்னத்துக்கு போனில் அழைத்துப் பேசியிருக்கிறார். எந்த ரோல் கொடுத்தாலும் நடிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததாகத் தெரிகிறது. பார்த்திபனுக்காக ஒரு சின்ன ரோலினை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் மணிரத்னம்.
செல்வராகவன் இயக்கத்தில் உருவான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் சோழ மன்னராகப் பார்த்திபன் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
**ஆதினி**
�,”