இந்தியா-நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட்: இன்று தொடங்குகிறது!

Published On:

| By Balaji

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 3) மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்துள்ளதால் தொடரின் வெற்றியை நிர்ணயிக்க போகும் இந்தப் போட்டியை வெல்ல இரு அணிகளும் தீவிர முனைப்புடன் உள்ளன

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டி20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்று கைப்பற்றியது.

இரண்டு டெஸ்ட் போட்டி தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’ வில் முடிந்தது. இந்த நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

டி20 தொடர் மற்றும் முதல் டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி இந்தப் போட்டியில் விளையாடுவார் என்பதால் இந்திய அணி பேட்டிங்கில் கூடுதல் பலத்துடன் காணப்படும். விராட் கோலி அணிக்குத் திரும்பி இருப்பதால் இந்திய அணியில் யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வான்கடே ஆடுகளத்தைப் பொறுத்தவரையில் சுமார் இரண்டாண்டுக் காலம், குறைவான போட்டிகளே நடைபெற்றதால் ஆடுகளம் முழுவதும் பச்சை புற்களால் நிறைந்து காணப்படுகிறது. புற்களின் உயரம் குறைக்கப்பட்டாலும் அதிக அளவிலான மாற்றங்கள் செய்யப்படவில்லை. மேலும் மழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனால் ஆடுகளத்தின் தன்மைக்கேற்றவாறு கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்படுவாரா அல்லது பழைய கூட்டணியே தொடருமா என்பதையும் அணி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்.

மறுபக்கம், நல்ல தொடக்கம் கிடைத்தும் இந்திய மண்ணில் ஸ்பின்னர்களைச் சமாளிக்க முடியாமல் திணறியது நியூசிலாந்து. தொடக்க வீரர் டாம் லாதம் மிக சிறப்பான தொடக்கத்தை இரு இன்னிங்ஸ்களிலும் வெளிப்படுத்தினார். மேலும் வில் யங், கேப்டன் வில்லியம்சன், ப்லண்டல் போன்றோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். ராஸ் டெய்லர் மற்றும் நிக்கோலஸ் ஆகியோரும் இவர்களுடன் சேர்ந்து சிறப்பாக பங்களிக்கையில் சிறந்த ஸ்கோரை நிச்சயம் எட்டும் நியூசிலாந்து

ஸ்பின்னிங் டிராக்கான கான்பூரிலேயே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது அந்த அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணி. இன்று தொடங்கவுள்ள ஆட்டம் வேகப்பந்து வீச்சுக்குக் கூடுதலாக உதவும் என்பதால் ஜேமிசனும் சௌதியும் அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளப் பார்ப்பர். இந்திய மண்ணில் தன் முதல் டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி வெல்லுமா அல்லது சொந்த மண்ணில் தொடர் வெற்றியை நீடிக்க போகிறதா இந்திய அணி. இன்று காலை 9 மணிக்குத் தொடங்கும் ஆட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும்.

**-ராஜ்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share