லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் விக்ரம் படத்தில் வில்லன் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பான தேர்தல் பணிகளில் மும்மரமாக இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்தச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால் கமல்ஹாசனின் மீது அவரின் ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் பார்வையும் திரும்பியுள்ளது.
தேர்தல் ஒருபக்கம் இருக்கட்டும், நடிகராக கமல்ஹாசன் நடிக்க இரண்டு படங்கள் உருவாகி வருகிறது. ஒன்று, ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்தியன் 2 படம். பாதிப் படப்பிடிப்பு மட்டுமே நடந்ததோடு, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குத் தயாராகிவருகிறது. இரண்டாவது, கமல்ஹாசன் தயாரித்து நடிக்க இருக்கும் விக்ரம் திரைப்படம். இந்தப் படத்தின் அறிமுக வீடியோ கமல்ஹாசனின் பிறந்த தினத்தன்று வெளியானது.
விஜய் நடித்து வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றியைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாக இருக்கிறது விக்ரம். தேர்தலுக்கு முன்பே படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால், எதிர்பாராத சூழல்களால் அது நடக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகே, விக்ரம் தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில், விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.
ரஜினியின் தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசும்போது, ரஜினி ரசிகனாக இருந்ததால் சிறு வயதில் கமல்ஹாசனின் பட போஸ்டர்கள் மீது சாணியை எறிந்திருக்கிறேன் என்று கூறியது பெரியளவில் விமர்சனங்களுக்கு உட்பட்டது. கமல் ரசிகர்கள் கொந்தளித்தனர். அதன்பிறகு, கமலை நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்தார் ராகவா லாரன்ஸ். ரஜினியின் மீதிருந்த அளவுக்கடந்த அன்பினால், சிறுவயதிலிருந்தே வில்லனாகப் பார்த்துப் பழகிய கமல்ஹாசனுக்கு படத்தில் வில்லனாகப் போகிறார்.
**- ஆதினி**�,