நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலையால் நிகழ்ந்தது அல்ல எனவும் அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று(ஜூன் 14) மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். 34 வயதே ஆன சுஷாந்த்தின் திடீர் மரணம் பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப்பலரும் அவரது மரணத்திற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
தான் நடித்த திரைப்படங்களிலும், ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளிலும் ‘எந்தத் தருணத்திலும் யாரும் தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளக் கூடாது, தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்பதான கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்து வந்த சுஷாந்த் அதற்கு விபரீதமாக இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பு இல்லை என்று அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
@ankitbhatiafilms you were really inspiring sir ❤️
இந்த நிலையில், ‘சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டுள்ளார்’ என்று அவரது உறவினர்கள் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
சுஷாந்த் சிங்கின் மாமா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ‘சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து உடனடியாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். ஹரியானா மாநில முதல்வர் அலுவலகத்தின் சிறப்பு போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றி வரும் சுஷாந்தின் மைத்துனர் ஓ.பி சிங்கும் சுஷாந்தின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 8ம் தேதி தான் சுஷாந்த்தின் முன்னாள் பெண் மேனேஜர் திஷா சலியான் மும்பையில் 14 மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இன்னும் உண்மைக் காரணம் வெளியே தெரியாத அந்த சம்பவம் நடந்து ஆறே நாட்களில் சுஷாந்த்தும் மரணமடைந்திருப்பது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள ஆரம்பகட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின் படி சுஷாந்த் மூச்சுத்திணறல் காரணமாக இறந்து விட்டதாகவும் அவரது கழுத்தில் கயிற்றால் இறுக்கியது போன்ற அடையாளங்கள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மரணம் தற்கொலையால் நிகழ்ந்ததே என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் முழு பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தற்போது எழுந்துள்ள சந்தேகங்களின் அடிப்படையிலான முழு விசாரணை அறிக்கைகள் ஆகியவை வெளி வரும் போதுதான் சுஷாந்தின் மரணத்தின் உண்மைப் பின்னணி வெளிச்சத்திற்கு வரும்.
பீகாரில் இருந்து சுஷாந்தின் தந்தை, சகோதரி உள்ளிட்டோர் மும்பை வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வந்தவுடன் இன்று(ஜூன் 15) பிற்பகல் 3 மணியளவில் இறுதி சடங்குகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”