கர்ப்பம் குறித்த உடல்கேலி:பதிலடி கொடுத்த காஜல்

Published On:

| By admin

நடிகை காஜல் அகர்வால் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட உடல் மாற்றத்தை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

நடிகை காஜல் அகர்வால் கிச்சுலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்பு சில மாதங்களிலேயே அவர் கர்ப்பமானார் எனவும் அதனால் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த படங்களில் இருந்து அவர் விலக நேரிட்டது எனவும் முன்பு தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தது. ஆனால், அது குறித்து காஜல் எதுவும் சொல்லாமல் இருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருந்த விஷயத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்தார்.

பின்பு தாய்மை காரணமாக அவரது உடல் எடை கூடுவது உள்ளிட்ட பல மாற்றங்கள் ஏற்பட அதை சிலர் கேலி செய்து பதிவிட்டு இருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காஜல் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “என்னுடைய மனதளவிலும், வாழ்விலும், வீட்டிலும் குறிப்பாக பணியிடத்திலும் அழகான பல மாற்றங்களை சந்தித்து வருகிறேன். அதோடு கேலிகளையும் சந்தித்து வருகிறேன். கர்ப்ப காலத்தில் பொதுவாகவே பெண்களுக்கு உடல் அளவிலும் மனதளவிலும் நிறைய மாறுபாடுகள் வரும். உடல் எடை கூடுவது, குழந்தைகளுக்கு பாலூட்ட மார்பகங்கள் பெரிதாவது என நம்மை உடல் தயார்ப்படுத்தும். இது இயற்கையான ஒரு விஷயம்தான்.

இது குறித்து கவலைப்படவோ தாழ்வாக எண்ணவோ எதுவும் இல்லை. கேலி செய்பவர்களுக்கு இது குறித்து புரியவில்லை என்றால் விலகி விடுங்கள். தேவையில்லாமல் கருத்து சொல்ல இதில் ஒன்றுமே இல்லை. தாய்மை நம் வாழ்வின் அழகான ஒரு பகுதி. அதை நீங்கள் மகிழ்ச்சியாக ஏற்று கொள்ளுங்கள். குழந்தை பிறந்த பிறகு உங்கள் உடல் பழையபடி ஆகிவிடும். அப்படி இல்லை என்றாலும் அதில் வருத்தப்பட எதுவும் இல்லை. என்னுடைய இந்த பதிவு என்னை போன்று தேவையில்லாத கேலிகளை எதிர்கொள்பவர்களுக்கு நிச்சயம் உதவும் என நினைக்கிறேன்” என அந்த பதிவில் காஜல் தெரிவித்துள்ளார்.

காஜலின் இந்த பதிவிற்கு காஜலின் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share