போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. அவரது ரசிகர்களும், தமிழ் சினிமா வியாபார வட்டாரமும் எதிர்பார்த்த படம் வலிமை.
இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடித்துள்ளார்கள். இன்று திரைக்கு வந்துள்ள வலிமை படத்திற்கு அஜித்குமார் ரசிகர்கள் உற்சாகத்துடன் இன்று அதிகாலை 4 மணி முதல் பார்த்து வருகிறார்கள்.
அதோடு இதுவரை வெளியான அஜித்குமார் படங்களின் வசூலை இந்த வலிமை படம் முறியடித்து விடும் என்ற எதிர்பார்ப்புடன் தியேட்டர் உரிமையாளர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை வலிமை படத்தின் முதல் காட்சியை சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, போனி கபூர் ஆகியோர் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை கண்டுகளித்துள்ளார்கள்.
தமிழ்நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட திரைகளில் வலிமை வெளியாகியுள்ளது. முதல் நாள் மொத்த வசூல் சுமார் 30 கோடி ஆக கூடிய வாய்ப்பு இருப்பதாக வணிக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
படம் பற்றிய கலவையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் காலை முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. அஜித்குமார் ரசிகர்களுக்கு பிடித்துள்ள வலிமை குடும்பத்துடன் பார்க்ககூடிய படமாக இல்லை என்கிற விமர்சனம் வலிமையாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருவதால் திங்கட்கிழமைக்கு பின்னரே வலிமை வசூல் அடிப்படையில் வலிமையான படமா என்பது தெரியவரும்
**-இராமானுஜம்**