நடிகை ஃபரினா தான் தற்போது நடித்து வரும் சீரியலை விட்டு விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் புகழ் பெற்றவர் ஃபரினா. இதில் இவர் வெண்பா என்ற வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்தது. இதனால், சீரியலில் இருந்து சில மாதங்கள் பிரேக்கில் இருந்தார் ஃபரினா. பின்பு பழையபடி மீண்டும் சீரியலில் வில்லியாக நடிக்கத் தொடங்கினார்.
இவரது வில்லத்தனமான நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஃபரினாவின் அம்மா கதாப்பாத்திரத்தில் நடிகை ரேகா அறிமுகமாகி உள்ளார். ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தவிர்த்து ஃபரினா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘அபி டெய்லர்’ என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இதில் இவருடைய கதாப்பாத்திரத்தின் பெயர் பவானி. ‘பாரதி கண்ணம்மா’ வில்லி கதாப்பாத்திரத்திற்கு அப்படியே நேர் எதிரான கதாப்பாத்திரம் ‘பவானி’. இதில் தாவணி பாவாடை போட்ட பெண்ணாக வலம் வருகிறார் ஃபரினா.
இந்த சீரியலில் இருந்து தான் தற்போது விலகுவதாக ஃபரினா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வளவு நாள் இந்த கதாப்பாத்திரத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்து சில மாதங்களே ஆவதால், இரண்டு சீரியல்களிலும் மாறி மாறி நடிப்பது மிகவும் சிரமமாக இருப்பதால் ‘அபி டெய்லர்ஸ்’ சீரியலில் இருந்து விலகுவதாகவும் மற்றபடி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா கதாப்பாத்திரத்தில் தொடர்வேன் எனவும் ஃபரினா கூறியுள்ளார்.
**ஆதிரா**