‘சூர்யவம்சம்’ திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைந்ததை ஒட்டி நடிகர் சரத்குமார் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, மணிவண்ணன், ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் 1997ல் வெளியான திரைப்படம் ‘சூர்யவம்சம்’. இந்த படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். படிப்பு ஏறாத தன் மகன் சரத்குமார், தேவையானியை காதல் திருமணம் செய்து கொள்வார். அதனால், கோபம் கொள்ளும் அப்பா சரத்குமார் அவர்களை வீட்டை விட்டு துரத்தி விடுவார். பின்பு மகன் சரத்குமார் தன் உழைப்பால் முன்னேற தேவையானியும் படித்து கலெக்டர் ஆகி விடுவார். பின்பு கோபம் மறந்து அப்பா, மகன் என குடும்பமாக ஒன்று சேரும் விக்ரமனின் வழக்கமான ஃபேமிலி டிராமா கதை தான் இது. படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இப்போதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் பலருக்கும் விருப்பமான படங்களில் ஒன்றாக இருக்கும்.
படம் வெளியாகி இன்றோடு 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து நடிகர் சரத்குமார் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘விக்ரமன் இயக்கத்தில் ஆர்.பி. செளத்ரி தயாரித்துள்ள இந்த சூப்பர் ஹிட் படத்தில் வேலை செய்த நினைவுகளை மீண்டும் திரும்பி பார்ப்பது மகிழ்ச்சியான ஒன்று. இன்று வரைக்குமே இது ஒரு ப்ளாக்பஸ்டர் திரைப்படம் என்பதை மறுக்க முடியாது.
அப்போது கிட்டத்தட்ட ஒரு வருடம் தியேட்டரில் ஓடி அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்தார்கள் என்ற சாதனையை தக்க வைத்துள்ளது.
ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் என் நன்றியை தெரித்து கொள்கிறேன். ஊக்குவித்த அனைவரையும் மறக்க மாட்டேன் மற்றும் இது போல இன்னொரு படம் நடிக்க கடினமாக உழைத்து கொண்டிருக்கிறேன்’ என அந்த படத்தின் சில புகைப்படங்களையும் மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார் சரத்குமார்.
**ஆதிரா**