மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 ஜுன் 2022

இரு நடிகைகள் இணைந்து நடித்தால் சச்சரவா?: ஜனனி

இரு நடிகைகள் இணைந்து நடித்தால் சச்சரவா?: ஜனனி

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், கே4 கிரியேஷன்ஸ் சார்பில் கேசவன் தயாரிப்பில், சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் ‘வேழம்’.

வரும் ஜுன் 24ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று(ஜூன் 21) நடைபெற்றது.

இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஜானு சந்தர் பேசுகையில், “நான் ‘பைரவா’, ‘காலா’ போன்ற படங்களுக்குக் கிட்டார் வாசித்துள்ளேன். இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்த சந்தீப்பிற்கு நன்றி. நடிகர்கள் அசோக் செல்வன், ஜனனி, ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பை அருகிலிருந்து பார்த்து வியந்தேன். இந்தப் படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் எனது திறமையை வெளிக்காட்ட நல்ல ஸ்கோப் இருந்தது. அனைவரும் பார்த்து ரசிக்கும் நல்ல படமாக வேழம் திரைப்படம் இருக்கும்” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன், “நான் இந்தப் படத்தில் லீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இது ஒரு அழுத்தமான கதாபாத்திரம். அசோக் செல்வன் ஒரு சிறந்த நடிகர், எங்கள் கெமிஸ்ட்ரி அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.இயக்குநர் ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட். அவர் இந்த திரைப்படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் ஒரு தீவிரமான உளவியல் த்ரில்லர் அனுபவத்தை வழங்கும்” என்றார்.

நடிகை ஜனனி பேசுகையில், “பொதுவாகப் புதுமுகங்களுடன் இணைந்து பணியாற்றும்போது சில அசௌகரியங்கள், சந்தேகங்கள் இருக்கும். ஆனால், இந்தப் படத்தின் இயக்குநரான சந்தீப் ஷ்யாம் அதில் விதிவிலக்காக மிக அற்புதமான உழைப்பாளியாக இருந்தார்.

அசோக்கும் நானும் ‘தெகிடி’யில் இணைந்து பணியாற்றியுள்ளோம். இப்போது மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளோம். இந்தப் படத்தின் சில காட்சிகளை நான் பார்த்திருக்கிறேன். அது நன்றாக வந்திருக்கிறது.பொதுவாக இரண்டு நடிகைகள் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணிபுரியும்போது நடிகைகளுக்குள் சில சச்சரவுகள் இருக்கும் என்று ஒரு தவறான கருத்து உள்ளது, ஆனால், அது உண்மையல்ல. நானும் ஐஸ்வர்யாவும் மிக நல்ல நண்பர்களாகப் பழகினோம். ஜானுவின் இசையமைப்பு இந்த படத்திற்கு மிகப் பெரிய பலம். அவரிடமிருந்து எனக்கு ஒரு நல்ல பாடல் கிடைத்ததில் மகிழ்ச்சி. படத்தைச் சிறந்த முறையில் தயாரித்ததற்காகத் தயாரிப்பாளர் கேசவன் சாருக்கு நன்றி. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

இயக்குநர் சந்தீப் ஷ்யாம், “எனக்கு டைரக்சன் மீதுள்ள ஆர்வத்தைப் புரிந்து உணர்ந்து கொண்ட கேசவன் சார் போன்ற தயாரிப்பாளரைப் பெற்ற அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. அவருக்காக சில விளம்பரப் படங்கள் செய்துள்ளேன். அசோக் செல்வன் இப்படத்தில் பல தோற்றங்களில் தோன்றுவதால் அதற்காக உயிரைக் கொடுத்து உழைத்துள்ளார். ஜனனி இந்த படத்தில் ஒரு சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். ஐஸ்வர்யா ஒரு நல்ல நடிகை. அவரது நடிப்பு இந்த படத்தில் அபாரமாக இருக்கும் . இசையமைப்பாளர் ஜானு என் வகுப்பு தோழர். நாங்கள் இணைந்து இப்படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. படத் தொகுப்பாளர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவு இப்படத்திற்கு மிகப் பெரிய தூணாக அமைந்துள்ளது. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளரான கேசவன் பேசுகையில், “ இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம். இந்த திரைப்படத்திற்கு அனைவரும் தங்கள் முழு ஆதரவையும் அளித்ததைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. டிரெய்லர் மற்றும் பாடல்களில் அவர்களின் நடிப்பு மற்றும் குழுவின் உழைப்பைப் பார்த்து மிக உற்சாகமாக இருக்கிறேன். இந்த திரைப்படத்தை வடிவமைக்க எனக்கு உதவிய ஒட்டு மொத்தக் குழுவிற்கும் நன்றி. அவர்களுடன் பணிபுரிந்து நிறைய நல்ல அனுபவத்தைப் பெற்றுள்ளேன்” என்றார்.

-இராமானுஜம்

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி ...

3 நிமிட வாசிப்பு

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

3 நிமிட வாசிப்பு

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

புதன் 22 ஜுன் 2022