777 சார்லி படத்துக்கு வரி விலக்கு!

கிரண்ராஜ் இயக்கத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் '777 சார்லி'.
கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது. கடந்த 10ஆம் தேதி வெளியாகி, ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றது.
மனிதனுக்கும், நாய்க்கும் உள்ள பாசத்தை பதிவு செய்துள்ள படம் இந்தப் படத்தை கர்நாடக மாநில முதல்வர் பசரவாஜ் பொம்மை அண்மையில் பார்த்தார். அவருடன் அமைச்சர்கள், ஆர்.அசோக், பி.சி.நாகேஷ் ஆகியோரும் பார்த்தனர். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பசவராஜ் பொம்மை, திடீரென்று கண்ணீர்விட்டு அழுதார். தனது மறைந்த சன்னி என்ற நாயை இந்தப் படம் நினைவூட்டியதாகக் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "ரக்ஷித் ஷெட்டியின் கேரக்டரும் அவரது நடிப்பும் அபாரம். இந்த கேரக்டரில் நடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.குறிப்பாக நாயின் உணர்வுகளை கண்களால் வெளிப்படுத்தும் விதம் மிக அருமை. அனைவரும் பார்க்க வேண்டிய படம். நான் எப்போதும் சொல்வது போல தான் நிபந்தனையற்ற அன்பு எப்போதும் தூய்மையானது. இந்த சினிமா ரக்ஷித் ஷெட்டி மற்றும் சார்லி மூலம் அன்பின் தூய்மையை வெளிக் கொண்டு வந்துள்ளது" என்று உடைந்த குரலில் பேசினார்.
தற்போதுஇந்தப் படத்திற்கு கர்நாடக அரசு வரிவிலக்கு அறிவித்துள்ளது. ஜூன் 19 முதல் 6 மாதங்களுக்கு '777 சார்லி' டிக்கெட்டுகளின் விற்பனைக்கு மாநில சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படாது என்று கர்நாடக நிதித் துறை அதிகாரபூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது
திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டில் கர்நாடக அரசின் உத்தரவின்படி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படவில்லை என்பதை குறிப்பிட வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-இராமானுஜம்