மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 ஜுன் 2022

30 மொழிகளில் அமேசான் வெளியிடும் சுழல்- தி வோர்டெக்ஸ்’!

30 மொழிகளில் அமேசான் வெளியிடும்  சுழல்- தி வோர்டெக்ஸ்’!

விக்ரம் வேதா இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி ஆகியோரின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’.

இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம்.அனுசரண் ஆகியோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதளத் தொடரில் நடிகர்கள் ஆர்.பார்த்திபன்,கதிர்,சந்தானபாரதி, பிரேம், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ்,ஸ்ரேயா ரெட்டி,நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் வெளியாகும் ‘சுழல்- தி வோர்டெக்ஸ்’ என்ற க்ரைம் இன்வெஸ்டிகேட் திரில்லர் தொடரின் முன்னோட்டம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் அமேசான் ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோகித், அமேசான் இந்திய தலைவர் சித்தானந்த் ஸ்ரீராம், புஷ்கர் – காயத்ரி, அனுசரண், பிரம்மா, ஆர்.பார்த்திபன்,கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோருடன் படக்குழுவினரும், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் அமேசான் இந்திய தலைவர் சித்தானந்த் ஸ்ரீராம் பேசுகையில், “அமேசான் பிரைம் வீடியோவில் முதன்முதலாக இந்தியக் கதைகள், சர்வதேச மொழிகளில் வெளியாகிறது. தமிழ் மண்ணில் நடைபெறும் கதையொன்று, அதன் நிலவியல் எல்லைகளைக் கடந்து, மொழிகளைக் கடந்து, சர்வதேச அளவில் பார்வையாளர்களைச் சென்றடைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். திறமையான படைப்பாளிகள் குழுவாக இணைந்து உருவாக்கியிருக்கும் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’ எனும் வெப் சீரிஸ் ஜூன் 17ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. அதற்கான முன்னோட்டத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

புஷ்கர் மற்றும் காயத்ரி பேசுகையில், “இந்தத் தொடரின் கருவை மட்டும் தான் நாங்கள் முதலில் மும்பையில் இருந்த அமேசான் ஒரிஜினல்ஸ் தலைவரான அபர்ணா புரோகித்திடம் தெரிவித்தோம். கேட்டு முடித்ததும், இதுதான் அமேசானின் முதல் தமிழ் ஒரிஜினல்ஸ் தொடர் என உறுதியளித்தார்.

‘விக்ரம் வேதா’விற்குப் பிறகு எங்களைச் சந்திக்கும் பலரும், அடுத்து என்ன? என்ற வினாவை முன் வைப்பார்கள். அவர்களுக்கு இந்தத் தொடர் தான் சரியான பதிலாக இருக்கும். மூன்றாண்டு காலமாக இதன் திரைக்கதையை எழுதி, உருவாக்கியிருக்கிறோம். இந்தத் தொடர் முதலில் இந்திய மொழிகளில் வெளியாகும் எனத் தெரிவித்தனர். தற்போது அதையும் கடந்து முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவித்து, எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இந்தத் தொடரை இயக்கிய இயக்குநர்கள் அனுசரண் மற்றும் பிரம்மா, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இணைந்து கடுமையாக உழைத்து இதனை உருவாக்கி இருக்கிறார்கள்.

தமிழ்த் திரை உலகில் பெரும்பாலும் கதாசிரியர்களே இயக்குநர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இந்தத் தொடருக்காகக் கதை எழுதி, இயக்குவதற்காக இயக்குநர்கள் அனுசரண் மற்றும் பிரம்மாவை கேட்டுக் கொண்டபோது, உடனடியாக அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். இதற்காக அவர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பாணி தமிழ்த்திரையுலகில் இல்லை. இதனைத் தொடங்கி வைத்த இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தத் தொடரின் கதையைத் திரைப்படத்திற்கு எழுதுவது போல் வில்லன், கதாநாயகன், கதாநாயகி என எழுதவில்லை. எழுத எழுத எழுதிக்கொண்டே இருக்கிறோம். ஒரு புள்ளியில் கதாபாத்திரங்களைக் கடந்து கதை நிகழும் நகரம் கூட கதாபாத்திரமாக மாறியது. இதைப் படமாக எடுக்க வேண்டுமென்றால் ஏழு எட்டு மணி நேரம் தேவைப்படும். அதனால் அதனை எழுதி தனியாக வைத்து விட்டோம். அதனை அமேசான் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் எட்டு அத்தியாயங்களைக் கொண்ட வலைத்தளத் தொடராக உருவாக்கியிருக்கிறது” என்றார்.

இயக்குநர் பிரம்மா பேசுகையில், “இந்தத் தொடரின் முதல் நான்கு அத்தியாயங்களை இயக்கியிருக்கிறேன். தொடரை இயக்குவதற்கு முன் தயாரிப்பாளர்களான புஷ்கர் & காயத்ரி, ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் ஆகிய தொழில்நுட்பக் கலைஞர்களுடன் நீண்ட விவாதம் நடத்தி, தெளிவான திட்டமிடலையும் உருவாக்கிக் கொண்டோம். இந்த விவாதத்தின் ஊடாக கதாசிரியர்கள் எந்தப் புள்ளியை சர்வதேச அளவிலான பார்வையாளர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று எழுதினார்களோ அதனை நாங்கள் முதலில் தெளிவாக உட்கிரகித்தோம்” என்றார்.

இயக்குநர் அனுசரண் பேசுகையில், “இந்தத் தொடரின் இறுதி நான்கு அத்தியாயங்களை நான் இயக்கி இருக்கிறேன். நான் திரைப்படங்களை எழுதி, இயக்கியிருக்கிறேன். ஆனால் தொடர் இயக்குவது முதல் முறை என்பதால், இதுகுறித்த புரிதலுக்காக நீண்ட நேரம் பல விசயங்களைத் தேடித் தெரிந்து கொண்டேன். ஏனெனில் இந்தத் தொடரை நேர்த்தியாக இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அத்துடன் தயாரிப்பாளர்களான புஷ்கர் & காயத்ரி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற கடமையும் எனக்கு இருந்தது. இந்தத் தொடரை இயக்கத் தொடங்கிய பிறகு மிகப்பெரிய பொறுப்புணர்வை உணர்ந்தேன். எதிர்காலத்தில் வேறு சில திறமையான இயக்குநர்களுக்கும் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணினேன்” என்றார்.

நடிகர் ஆர்.பார்த்திபன் பேசுகையில், “32 ஆண்டு காலத் திரையுலக வாழ்க்கையில் சௌகரியமான முறையில் ஒரு படைப்பில் பணியாற்றி இருக்கிறேன் என்றால், அது இந்தச் சுழல் தொடரில் தான். நான் முதன் முதலில் நடிக்கும் வலைதளத் தொடர் இது. படப்பிடிப்பு நெருங்கும் தருணத்தில் என்னைத் தொடர்பு கொண்டு புஷ்கர் & காயத்ரி பேசினார்கள். அவர்களது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்தத் தொடரின் கதையைக் கேட்டவுடன் அதில் ஒரு ஜீவன் இருந்ததை உணர்ந்தேன்.

நம்முடைய கலாச்சாரத்தில் ஒரு புராணக்கதை உண்டு. ஞானப்பழம் யாருக்கு என்ற அந்தக் கதையில், ஞானப் பழத்திற்காக முருகன் உலகமெல்லாம் சுற்றச் சென்று விடுவார். விநாயகர் அருகிலிருக்கும் அப்பா, அம்மாவைச் சுற்றிவிட்டு, ஞானப்பழத்தைப் பெற்றுவிடுவார். அந்த விநாயகர் கதைதான் அமேசானின் கதை.

அந்தக் காலத்தில் சிவாஜியை விட மிகச் சிறந்த நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய நடிப்பு பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ஏனெனில் ஒவ்வொரு ஊராகச் சென்று நடிக்க வேண்டும். சென்னையில் அழகாக நடிக்க வேண்டும். பிறகு கோயம்புத்தூருக்குச் சென்று மீண்டும் அதே போல் அழகாக நடிக்க வேண்டும். பிறகு மும்பைக்குச் சென்று அதே போல அழகாக நடிக்க வேண்டும். ஆனால் அமேசானில் ஒரே ஒரு தொடரில் நடித்தால், உலகத்தில் உள்ள 240 நாடுகளில் ஒரே நேரத்தில், இந்தத் தொடரைப் பார்க்க முடியுமென்றால், இதுதான் அமேசானின் ஞானப்பழம். நம்முடைய படைப்பை உலக அளவில் ஒரே தருணத்தில் பார்த்து இரசிக்கிறார்கள் என்றால் அது மட்டற்ற மகிழ்ச்சி தானே.

ரெண்டு பொண்டாட்டியுடன் குடும்பம் நடத்துவது கடினம் என்பார்கள். ஆனால் இங்கு இரண்டு புருஷன்களுடன் குடும்பம் நடத்திய அனுபவம். ஆனால் வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. ஒரே ஆள் இரட்டை வேடம் போட்டது போல் இருந்தது. இந்தப்படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களையும், சந்தானபாரதி போன்ற கலைஞர்களையும் மனதாரப் பாராட்டுகிறேன்.

இந்தத் தொடரில் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் தொழிற்சங்கத் தலைவராகவும், ஒரு பெண்ணின் தகப்பனாராகவும் நடித்திருக்கிறேன். என் மகள் மீது வைத்திருக்கும் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தத் தெரியாது. எனக்கு நடிக்கத் தெரியாது அதனால் என்னுடைய நடிப்பு நன்றாக இருக்கும்” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், “எனக்கு இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி மீது நல்ல மரியாதை உண்டு. ஏனெனில் அவர்கள் கலை மீது அளவற்ற பற்றுக் கொண்டவர்கள். கொரோனா காலகட்டத்தின் போது என்னை அழைத்து வலைதளத் தொடரில் நடிக்க வேண்டும் எனக் கேட்டார்கள். நான் உடனே ஒப்புக்கொண்டேன். ஆனால் அந்தத் தொடர் இவ்வளவு பிரம்மாண்டமாக வெளியாகும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இந்தத் தொடரில் நடிப்பதற்கு முன் என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்கள். அதில் சில அத்தியாயங்களில் நான் இல்லை. அப்போது ஏன் இந்தத் தொடரில் என்னைத் தேர்வு செய்தார்கள்? என யோசித்தேன். ஆனால் கதை முழுவதும் படித்த பிறகு, என்னுடைய கதாபாத்திரத்தின் அழுத்தத்தை உணரமுடிந்தது. நந்தினி என்ற பிடிவாதம் கொண்ட பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் தங்கை காணாமல் போய் விடுவாள். அவளைத் தேடி நான் பயணப்படுவேன். கதையில் பல இடங்களில் நந்தினி, என் நிஜத்தை பிரதிபலித்திருப்பாள்.

நான் இதுவரை 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். ஆனால் இந்தத் தொடரில் நடிக்கும் போது எனக்குக் கிடைத்த சௌகரியங்களும், வசதிகளும் வேறு எங்கும், எப்போதும் கிடைத்ததில்லை. அதனால் மிகச் சிறந்த அனுபவத்தை உணர்ந்தேன். படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றும்போது சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களும் நேர்மறையான அதிர்வை வெளிப்படுத்தி, முழுமையான ஒத்துழைப்பு வழங்கினர். அமேசன் குழுவினர் எங்களைத் தாய்போல் அரவணைத்தனர். அபுதாபியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் எங்களையெல்லாம் அபர்ணா மேடம், மற்றவர்களிடம் பெருமிதத்துடன் அறிமுகப்படுத்தி, கொண்டாடினார்கள். அதுவும் என்னால் மறக்க இயலாது ”என்றார்.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசுகையில், “புஷ்கர் & காயத்ரி திரைக்கதையில் ஒரு இசையமைப்பாளர் எதிர்பார்க்கும் அனைத்து விதமான உணர்வுகளும் இடம்பெற்றிருக்கும். இந்தத் தொடரில் உள்ள எட்டு அத்தியாயங்களுக்கு இசை வடிவிலும் கதையை நகர்த்த இயலும் வகையில் திரைக்கதை அமைத்திருந்தார்கள். அது எனக்குச் சவாலாக இருந்தது” என்றார்.

-இராமானுஜம்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

புதன் 8 ஜுன் 2022