டான் கதை முதலில் எனக்குதான் வந்தது: உதயநிதி


அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்த டான் திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதனையொட்டி வெற்றி விழாவும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகளுக்கு கேடயம் வழங்கும் நிகழ்ச்சியும் நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அவர் பேசுகையில், “இந்தபடம் டாக்டர் திரைப்படத்தின் வசூலை முந்தும் என பாடல் வெளியீட்டு விழாவில் கூறியிருந்தேன். அது தற்போது நடந்திருக்கிறது. அந்த சாதனையை 3 வாரங்களிலேயே டான் முறியடித்திருக்கிறது. இது வெற்றி விழா என்பதனால், நிறைய உண்மைகளைக் கூறலாம் என நினைக்கிறேன். இந்தப் படத்தை முதலில் நாங்கள் ஒரு நான்கு பேர் (ரெட் ஜெயன்ட்) பார்த்தோம்.
முதல் பாதியைப் பார்த்து இது நகைச்சுவையாக இருக்கிறதா, சிரிப்பு வருகிறதா எனக் கேட்டு நாங்கள் ஒருமாதிரி ஆகிவிட்டோம். பிறகு, இரண்டாம் பாதி படத்தைப் பார்த்தோம், கடைசி ஒருமணி நேரம் அப்பா, மகன் உறவு மிகவும் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தப் படம் ஓடும் என்று சொன்னேன். சொன்னதைப்போல தமிழ் சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தைத் தலையில் தூக்கி வைத்துகொண்டாடி இருக்கிறார்கள். அதற்கு நன்றி.
இன்னொரு உண்மை சொல்கிறேன். இந்தக் கதையை வேறு ஒரு ஹீரோ கேட்டு நிராகரித்திருக்கிறார். அந்த ஹீரோ நான்தான்.இந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தது. பள்ளிக்கூட காட்சிகள் என்னால் செய்ய முடியாது. அதனால், இதை நான் செய்யவில்லை. பிறகு அப்பா, மகன் உணர்வுகள் நிச்சயம் எனக்கு வந்திருக்காது" என்றார் உதயநிதி ஸ்டாலின்.
-இராமானுஜம்