மாஸ்டர் பீஸ் : பெருமையை பெற்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்!

2021ஆம் ஆண்டு இயக்குநர் வசந்த் எஸ்.சாய் இயக்கத்தில் ஓடிடியில் வெளியான தமிழ் திரைப்படம் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’.
அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய மூன்று பெண்களை மையமாகக் கொண்ட சிறுகதைகள் இந்தப் படத்தில் படமாக்கப்பட்டுள்ளன.
இந்தப் படத்தில் லட்சுமி பிரியா சந்திரமெளலி, பார்வதி மேனன், காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், மாரிமுத்து, செந்தில்குமாரி ஆகியோர் நடித்துள்ளனர். 1980, 1995, 2007 என இந்த காலகட்டங்களில் வாழும் மூன்று பெண்கள் நாளுக்கு நாள் அனுபவிக்கும் கஷ்டங்களின் பதிவுதான் இப்படம்.
பெண் சுதந்திரம், சமத்துவம் என காலம்காலமாக எவ்வளவு நியாயங்கள் பேசி போர்க்கொடி தூக்கினாலும், பெண்களின் நிலை மாறியபாடில்லை என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு இப்படம் காட்டியது. இத்தகைய அடக்குமுறையிலிருந்து பெண்கள் வெளிவர வேண்டும் என்பதையும், சமூகத்தில் பெண்களுக்கெதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளையும் இப்படம் தெள்ளத் தெளிவாக காட்டியிருந்தது.
இப்படம் வெளியாவதற்கு முன்னரே கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஒரு சிறப்பாக சர்வேதேச அங்கீகாரம் ஒன்று இந்தப் படத்திற்கு கிடைத்துள்ளது.
ஜப்பானில் உள்ள ஃபுக்குவோகா என்கிற நகரில் சமீபத்தில் நடைபெற்ற 29-ஆவது ஆசிய புக்குவோகா திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது.மேலும் அந்நகரில் இருக்கும் சர்வதேச சிறந்த திரைப்படங்களுக்கான நூலகத்தில் வைப்பதற்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த லைப்ரரியின் சிறப்பம்சம் என்னவென்றால் உலகில் வெளியாகும் படங்களில் சிறப்பான படங்களை தேர்வு செய்து, எதிர்கால சந்ததியினருக்காக இதனை பாதுகாத்து வைத்துக் கொள்கிறார்கள்.
அந்த வரிசையில் அந்த நூலகத்தினர் இந்த ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற படத்தையும் தேர்வு செய்துள்ளனர். இதனை ‘ஆசியாவின் மாஸ்டர் பீஸ்’ என்று கூறி படத்தை மிகவும் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இயக்குநர் வசந்த் எஸ்.சாய் இந்த சிறப்பான செய்தியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் கூறி அவரது வாழ்த்தினைப் பெற்றார்.